உலகம்

பாகிஸ்தான்: நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை

நிவேதா ஜெகராஜா

பாகிஸ்தான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியில் பாகிஸ்தான் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. அதைத்தொடர்ந்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கின.

இதில் வெற்றி பெற, நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 342 எம்.பி.க்களில் 172 பேரின் ஆதரவை இம்ரான் கான் அரசு பெற வேண்டும். எதிர்க்கட்சிகள் தரப்பில் 177 எம்.பி.க்களும், அரசு தரப்பில் 164 எம்.பி.க்களும் இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் `தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி’யின் எம்.பி.க்களில் 22 பேர் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர்கள் தோற்கும் நிலை நிலவுவதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆளும் கூட்டணியில் இருந்து முத்தாஹிதா குவாமி கட்சியும் விலகியது. இதுமட்டுமன்றி ஏற்கெனவே பாகிஸ்தான் வரலாற்றில் எந்த பிரதமரும் 5 ஆண்டுகள் முழுவதும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இதுவரை எந்தவொரு பிரதமரின் பதவியும் பாகிஸ்தானில் பறிக்கப்பட்டதில்லை. மாறாக தீர்மானத்துக்கு முன்னர் அவர்களே பதவிவிலகிவிடுவர். அந்தவகையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெற்றிபெற்று இம்ரான் கான் பதவி பறிக்கப்பட்டாலும் அது வரலாறுதான்; போலவே எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு தோற்று, இம்ரான் கான் முழு ஆட்சிக்காலமும் பதவி வகித்தாலும் அது புது வரலாறாகவே அமையும்.

இந்நிலையில் பெரும் பரபரப்புக்கு இடையே நடைபெற்ற இந்த வாக்கெடுப்பு, சில பேரவை உறுப்பினர்களால் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுசார்ந்து கடும் அரசியல் குழப்பம் நிலவி வந்ததால், அங்கு நம்பிக்கையில்லா தீர்மானம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசியல் குழப்பங்கள் நிலவுவதை சுட்டிக்காட்டி இம்ரான் கான் தரப்பில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட அதிபருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

`நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் தயாராக வேண்டும். என் ஆட்சியை கலைக்க வெளிநாட்டு சதி நடந்தது அம்லபமாகியுள்ளது. தங்களை யார் ஆள வேண்டுமென்பதை பாகிஸ்தானியர்களே முடிவு செய்யட்டும். தேர்தல் முடிவு வெளியாகும்வரை, இடைக்கால அரசு நடக்கட்டும். ஜனநாயக முறைப்படி இந்த தேர்தல் நடத்தப்பட் வேண்டும்’ என்று நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார்.