வங்கதேச தேசியவாதக் கட்சியின் மூத்த தலைவராக நிதாய் ராய் சவுத்ரி அறியப்படுகிறார். தொடர்ந்து ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வந்த நிலையில்தான், இன்று தாரிக் அமைச்சரவையிலும் நிதாய் ராய் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் கடந்த 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் பிஎன்பி கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். தாரிக் ரஹ்மான் நீண்டகால தசாப்தத்திற்குப் பிறகு பிரதமராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பெண்கள் பிரதமர் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ரஹ்மானைத் தவிர, 25 அமைச்சர்களும் 24 மாநில அமைச்சர்களும் பதவியேற்றனர். 25 அமைச்சர்களில் 17 பேர் புதிய முகங்கள், அனைத்து மாநில அமைச்சர்களும் முதல்முறையாக இந்தப் பதவியை வகிக்கின்றனர். பிரதமர் ரஹ்மான் முதல்முறையாக அமைச்சரவை உறுப்பினராகவும் உள்ளார்.
இந்த அமைச்சரவையில், ஒரேயொரு இந்துவுக்கும் இடம் கிடைத்துள்ளது. அவருக்கு இடம் கிடைத்தது எப்படி என இங்கு பார்ப்போம். வங்கதேச தேசியவாதக் கட்சியின் மூத்த தலைவராக நிதாய் ராய் சவுத்ரி அறியப்படுகிறார்.
1949ஆம் ஆண்டு மகுரா மாவட்டத்தில் பிறந்த அவர், அங்கேயே ஆரம்ப கல்வியை முடித்துள்ளார். பின்னர் டாக்கா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டம் பயின்ற அவர், அங்கே பயின்றபோதே அரசியலிலும் கால் பதித்துள்ளார். 1988ஆம் ஆண்டு, மகுரா தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1990 முதல் ஹுசைன் முகமது எர்ஷாத் அரசாங்கத்தில் 3 மாதங்கள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். எர்ஷாத் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, நிதாய் ராய் சவுத்ரி பிஎன்பியில் சேர்ந்து அதன் துணைத் தலைவரானார். அதுமுதல் அவர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கின் அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.
ஷேக் ஹசீனா தலைமையிலான கட்சியையும் குற்றம்சாட்டி வந்தார். நீதித்துறையை சமரசம் செய்து அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், ஒரு பாசிச ஆட்சியை ஷேக் ஹசீனா அரசாங்கம் உருவாக்கியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், பிஎன்பி உறுப்பினர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அரசியல் ஒடுக்குமுறை என்றும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வந்த நிலையில்தான், இன்று தாரிக் அமைச்சரவையிலும் நிதாய் ராய் இடம்பெற்றுள்ளார். நிதாய் ராயைத் தவிர, தாரிக் ரஹ்மானின் அமைச்சகத்தில் ஒரு புத்த சக்மா தலைவரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.