செய்தியாளர் - ராஜ்குமார்.ர
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதன் காரணமாக, ரஷ்யா தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்யை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகளவில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவும் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கணிசமான அளவில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் நாடுகள் மீது அமெரிக்காவின் அழுத்தமும் அதிகரித்து வருகிறது. ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து வாங்கும் நாடுகள் மீது 100 விழுக்காடு வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கும் சட்டமும் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், இந்தியா மீதும் கூடுதல் அழுத்தம் ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர்மிர் ஜெலென்ஸ்கியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ரஷ்யாவின் எண்ணெய் வருவாய் குறைந்தால், உக்ரைன் போருக்கான ரஷ்யாவின் செலவிலும் தாக்கம் ஏற்படும் என்பது அவரது கருத்தாக உள்ளது. இந்த நிலையில், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா திடீரென நிறுத்திவிட்டு, வேறு நாடுகளிடம் இருந்து எண்ணெய் வாங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உடனடியாக வேறு நாடுகளிடம் இருந்து தேவையான அளவு எண்ணெயை வாங்குவது சிரமமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். உலகளவில் கிடைக்கும் எண்ணெய்யின் அளவு ஏற்கெனவே குறைவாக இருக்கும் நிலையில், இந்தியா போன்ற மிகப்பெரிய நாடு ஒரே நேரத்தில் சந்தையில் இருந்து அதிக அளவில் எண்ணெய்யை வாங்கத் தொடங்கினால், எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்களிலும் சில கட்டுப்பாடுகள் இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதாவது, உலகில் கிடைக்கும் அனைத்து வகையான கச்சா எண்ணெய்யையும் இந்தியாவில் உள்ள அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களாலும் ஒரே மாதிரியாக சுத்திகரிக்க முடியாது. எண்ணெய்யின் அடர்த்தி உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அதைச் சுத்திகரிக்க முடியுமா என்பது தீர்மானிக்கப்படுகிறது.
இதனால், ரஷ்ய எண்ணெய்க்குப் பதிலாக வேறு நாட்டில் இருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்றால், அந்த எண்ணெய் இந்தியாவின் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்றதா என்பதையும் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், இந்தியாவின் 140 கோடி மக்களின் அன்றாட தேவைக்கான எரிசக்தியை உறுதி செய்வதே அரசின் முக்கியப் பொறுப்பு என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது என்பது விலை மட்டுமல்லாமல், நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வது, எண்ணெய் கிடைக்கும் அளவு மற்றும் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அது பொருந்துமா என்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.