அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஈரான் போர் முயற்சி, கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக “No Kings” இயக்கம் தலைமையில் அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் லட்சக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயகமும் அரசியல் சாசனமும் காக்கப்பட வேண்டும் என கோசம் எழுப்பினர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள், குறிப்பாக ஈரான் மீதான போர் மற்றும் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. "No Kings" (அரசர்கள் வேண்டாம்) என்ற முழக்கத்துடன், சனிக்கிழமை (மார்ச் 28, 2026) அன்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரம்மாண்டமான போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த போராட்டங்கள், ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தைக் காக்க வலியுறுத்தி, பல நகரங்களில் பிரம்மாண்ட பேரணிகளாக நடைபெற்றன
அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் டி.சி, லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, மயாமி, அட்லாண்டா, சான் டியாகோ வாஷிங்டன் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களிலும், லண்டன், பாரீஸ், பெர்லின், ரோம் போன்ற ஐரோப்பிய நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிரம்பின் அதிரடியான குடியேற்றக் கொள்கைகள் மற்றும் திருநங்கையர் உரிமைகள் பறிப்பு, ஈரான் உடனான போர் பதற்றம், கிரீன்லாந்தை வாங்கும் முயற்சி ஆகியவற்றை எதிர்த்து இந்த போராட்டம் நடந்தது . இதில் பொதுமக்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
2025 ஜனவரியில் டிரம்ப் தமது இரண்டாவது அதிபர் பதவிக்காலத்தைத் தொடங்கினார். இந்த போராட்டம் அவருக்கு எதிராகச் செயல்படும் "No Kings" (மன்னர்கள் தேவையில்லை) என்ற அடிமட்ட மக்கள் இயக்கத்தின் மூன்றாவது மிகப்பெரிய போராட்டமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்களிலும் சுமார் 3,100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்தப் பேரணிகளில் கிட்டத்தட்ட 90 லட்சம் மக்கள் பங்கேற்றதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.