plane crash reuters
உலகம்

ராணுவ விமான விபத்து.. பயணித்த 32 பேரும் பலி.. நைஜீரியாவில் சோகம்!

சமீபத்திய ஆண்டுகளில் நைஜீரியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Prakash J

நைஜீரியாவின் பெனின் நகரத்தில் இருந்து லாகோஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த நைஜீரிய விமானப்படைக்குச் சொந்தமான ATR-42 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 32 பேரும் பலியாகினர்.

நைஜீரியாவின் பெனின் நகரத்தில் இருந்து நைஜீரிய விமானப்படைக்குச் சொந்தமான ATR-42 ரக விமானம் லாகோஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவ்விமானம் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அதனுடனான தொடர்பை இழந்தனர். இந்த நிலையில்தான், தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒண்டோ மாகாணத்தில் விழுந்து அவ்விமானம் விபத்துக்குள்ளானது. கடற்படைத் தளத்திற்கு அருகிலுள்ள இக்போகோடா என்ற கடலோர நகரத்திற்கு அருகே விமானத்தின் பாகங்கள் கண்டறியப்பட்டு, தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டன.

plane crash

உடனடியாகத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் பயணித்த 25 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் என மொத்தம் 32 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த விமானம் ஒரு ஆற்றின் அருகே விழுந்ததாகவும், அதன் சிதைவுகளில் ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கியதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு (Bola Tinubu) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், நாட்டில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்து குறித்து காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் நைஜீரியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.