அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் தற்காலிக நிறுத்தத்தில் இருக்கும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டி தீவிரமடைந்துள்ளது. உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் இந்த வழித்தடத்தில், கடலடி இணைய கேபிள்களுக்கு கட்டணம் விதித்து, பணம் செலுத்தாவிட்டால் போக்குவரத்தைத் தடை செய்யலாம் என ஈரான் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்து வருகிறது. அதேசமயம், உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகளவில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மீதான அமெரிக்க முற்றுகை தொடர்வதால், அதை எதிர்கொள்ள ஈரான் பல்வேறு வழிகளில் மிரட்டல் விடுத்து போராடி வருகிறது. ஐரோப்பா, ஆசியா மற்றும் பாரசீக வளைகுடாவிற்கு இடையே பரந்த இணைய மற்றும் நிதிப் போக்குவரத்தை மேற்கொள்ளும் கடலடி கேபிள்களை நோக்கித் தன் பார்வையை திருப்பியுள்ளது ஈரான்.
அரபு நாடுகளை ஐரோப்பா மற்றும் ஆசியாவுடன் இணைக்கும் கடலடி கேபிள்களை இலக்காகக் கொள்ளக்கூடிய ஒரு திட்டம் குறித்து ஈரான் அரசு கடந்த வாரம் விவாதித்துள்ளது. இதனையடுத்து கடலுக்கடியில் செல்லும் இணைய கேபிள்களுக்கு நாங்கள் கட்டணம் விதிப்போம் என ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி கடந்த வாரம் அறிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியின் கீழ் பதிக்கப்பட்ட கடலடி இணைய கேபிள்களைப் பயன்படுத்துவதற்காக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடம் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. மேலும், நிறுவனங்கள் பணம் செலுத்தாவிட்டால் போக்குவரத்து தடைபடக்கூடும் என்று அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் ஈரானிய சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், அதே நேரத்தில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு உரிமைகள் பிரத்தியேகமாக ஈரானிய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தன.
அமெரிக்கா ஈரான் மீது விதித்திருக்கும் கடுமையான தடைகள் காரணமாக ஈரானுக்குப் பணம் செலுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தொழில்நுட்ப நிறுவனங்களைத் தங்கள் விதிமுறைகளுக்கு இணங்குமாறு அந்த ஆட்சியால் எவ்வாறு கட்டாயப்படுத்த முடியும் என்பது தெளிவாக இந்த செய்திகளில் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும், உலகளாவிய தரவுப் பரிமாற்றத்தின் மூலம் ஈட்டப்படும் டிரில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான வருவாயைப் பாதிக்கக்கூடிய வகையிலும், உலகளாவிய இணைய இணைப்பைப் பாதிக்கும் வகையிலும், கடலுக்கடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்களுக்கு (cables) சேதம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கும் மறைமுக மிரட்டல்களை, அரசு சார்ந்த ஊடகங்கள் விடுத்துள்ளன.
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் இராணுவ பலத்தைத் தாண்டித் தன் வசம் சக்திவாய்ந்த கருவிகள் பல உள்ளதாக ஈரான் தொடர்ந்து சமிக்ஞை செய்து வருகிறது. எரிசக்தி ஏற்றுமதியைத் தாண்டி, ஹார்முஸ் நீரிணையை ஆயுதமாக பயன்படுத்துகிறது ஈரான். ஈரான் தனது புவியியல் ரீதியான சாதக நிலையை நீண்டகாலப் பொருளாதார மற்றும் உத்திசார் வல்லமையாக மாற்றிக்கொள்ள முயல்கிறது.
கடலடி கேபிள்கள் உலகளாவிய இணைப்பின் முதுகெலும்பாகத் திகழ்ந்து, உலகின் இணைய மற்றும் தரவுப் போக்குவரத்தின் பெரும்பகுதியைச் சுமந்து செல்கின்றன. இவற்றை இலக்காகக் கொள்வது இணைய வேகத்தை மட்டும் பாதிக்காமல், வங்கி அமைப்புகள், இராணுவத் தொடர்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு முதல் தொலைதூரப் பணிமுறை, இணைய விளையாட்டுகள் மற்றும் streaming services வரை அனைத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும்.