newyork flood Chyno News
உலகம்

வெள்ளத்தில் மூழ்கிய நியூயார்க் நகரம்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

PT WEB

வடகிழக்கு அமெரிக்காவில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் கனமழையால் பல நெடுஞ்சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் காரணமாக அன்றாடப் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானதால் அங்கு அவசர கால நிலை அறிவிக்கப்பட்டது. மேலும் ஸ்காட்ச் பிளைன்ஸ் போன்ற நகரங்களில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியிருப்பது, மன்ஹாட்டனில் உள்ள சுரங்கப்பாதைகளுக்குள் வெள்ளம் புகுந்தது உள்ளிட்ட வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

தென்கிழக்கு நியூயார்க், வடகிழக்கு நியூ ஜெர்சி மற்றும் பெனிசில்வேனியாவின் பல பகுதிகளில் குடியிருப்பாளர்கள் வீடுகளுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ப்ளைன்ஃபீல்ட் நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் போது தம்பதியினர் சென்ற கார் அடித்துச் செல்லப்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.