நியூசிலாந்து அமைச்சரவையில் குடியேற்றத் துறை (Immigration) அமைச்சராக இருப்பவர், எரிகா ஸ்டான்ஃபோர்ட். இவர், இந்தியர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு ஒருபோதும் பதிலளிப்பதில்லை என்று கூறியதுடன், அவை ஸ்பேம் போன்றது எனக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மே 6 அன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, அதிகாரப்பூர்வ கடிதப் பரிமாற்றத்தின்போது இத்தகைய கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “எனக்கு இந்தியர்களிடமிருந்து நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அனைத்தும் குடியேற்றப் பிரச்னைகள் குறித்து ஆலோசனை கேட்கும் மின்னஞ்சல்கள். ஆனால் அவர்களின் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்கப்படுவதில்லை. நான் அதைத் திறந்து பார்ப்பதில்லை. அவை Spam போன்றது” எனத் தெரிவித்துள்ளார்.
இவருடைய கருத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளது. நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி எம்.பி. பிரியங்கா ராதாகிருஷ்ணன், “அமைச்சர் ஓர் இனத்தைச் சேர்ந்த மக்களைத் தனிமைப்படுத்துகிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.