உலகம்

60 பகுதிகள்; 1,000 பேர் பாதிப்பு... இங்கிலாந்தில் புதிய மாறுபாட்டுடன் கொரோனா அச்சுறுத்தல்!

60 பகுதிகள்; 1,000 பேர் பாதிப்பு... இங்கிலாந்தில் புதிய மாறுபாட்டுடன் கொரோனா அச்சுறுத்தல்!

Sinekadhara

இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதிகளில் புதிய மாறுபாட்டுடன் கொரோனா வைரஸின் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 60 பகுதிகளில் சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தாக்கம் இன்னும் முடிந்தப்பாடில்லை. அமெரிக்காவில் பாதிப்பு 3 லட்சத்தை தொட்டுள்ள நிலையில், இங்கிலாந்திலும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. லண்டனில் உள்ள எல்லா மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புடன் சேரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருக்கின்றன.

இதற்கிடையே, இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய மாறுபாடு கொண்ட வைரஸால் இதுவரை 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஹான்காக் தாக்கல் செய்த அறிக்கையில், "கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இது இங்கிலாந்தின் தென்கிழக்கில் வேகமாக பரவி வருகிறது. புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டினால் 1000 பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன.

இந்த மாறுபாடு தற்போதுள்ள வகைகளை விட வேகமாக வளர்ந்து வருவதாக ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் தெரிகிறது. இந்த மாறுபாடு கடுமையான நோயை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்குமா என்பது தொடர்பாக தற்போது நான் எதுவும் கூற முடியாது. தடுப்பூசிகள் இந்த மாறுபாட்டை கட்டுப்படுத்த பயன்படுமா உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியவில்லை. எனினும், உலக சுகாதார அமைப்புக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் விரிவான ஆய்வுகளை செய்து வருகின்றனர்.

கடந்த வாரத்தில் லண்டன், கென்ட், எசெக்ஸ் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையரின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் கூர்மையான, அதிவேக உயர்வு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 வெவ்வேறு உள்ளூர் பகுதிகளில் இந்த மாறுபாடு தொடர்புடைய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதிய மாறுபாட்டின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அதன் காரணத்தை பொருட்படுத்தாமல் நாம் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் விதிகளைப் பின்பற்ற வேண்டும். மேலும் இந்த வைரஸை பரப்பக்கூடாது என்பதற்காக அனைவரும் தனிப்பட்ட பொறுப்பை ஏற்க வேண்டும்" என்று எச்சரித்துள்ளார்.