செய்தியாளர் - M.மீரா
ஆபத்தான முறையில் கள்ளத்தனமாக மக்கள் பிரிட்டனுக்குள் நுழைவதைத் தடுக்க, அந்நாட்டு அரசு ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அகதிகள் பாதுகாப்பான முறையில் சட்டப்படி பிரிட்டனுக்குச் செல்ல முடியும். இந்தத் திட்டத்தின்படி, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பிரிட்டனில் குடியேற வாய்ப்பு கிடைக்கும்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அன்னா டர்லி, இந்தப் புதிய திட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டார். அதன்படி, இந்தியா, வங்கதேசம், எகிப்து, கென்யா, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் உகாண்டா ஆகிய 7 நாடுகளில் வசிக்கும் அகதிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பிரிட்டனுக்குச் செல்ல முடியும்.
ஆனால், இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறி, மேற்கண்ட 7 நாடுகளில் ஏதேனும் ஒன்றில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். மேலும், 2026 அக்டோபர் 1-ம் தேதிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளிடமோ அல்லது ஐ.நா. அகதிகள் அமைப்பிடமோ (UNHCR) பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக அகதிகள் 2027-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை பிரிட்டனுக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், 3 வகையான வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. அதாவது, உள்ளூர் மக்களின் உதவியுடன் குடியேறுதல், வேலைவாய்ப்பு மூலம் குடியேறுதல் மற்றும் கல்வி வாயிலாக குடியேறுதல் ஆகிய வழிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தில் சேர விரும்புவோரின் அடையாளம், பாதுகாப்பு விவரங்கள், குற்றப் பின்னணி மற்றும் உடல்நலம் ஆகியவை முழுமையாகச் சோதிக்கப்படும். அதன்பிறகே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும், எத்தனை அகதிகளைப் பிரிட்டனுக்கு அழைத்து வருவது என்பது அங்குள்ள உள்ளூர் மக்களின் ஆதரவு மற்றும் அவர்களுக்கு உதவி செய்யும் அமைப்புகளின் திறனைப் பொறுத்து முடிவு செய்யப்படும். முதற்கட்டமாக சில நூறு பேரும், பின்னர் சில ஆயிரம் பேரும் அழைத்து வரப்படலாம் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.