உலகம்

News360: ஃபேஸ்புக், ட்விட்டருக்கு எதிராக புதிய செயலி - கைகூடுமா ட்ரம்ப்பின் நோக்கம்?

sharpana

ஃபேஸ்புக் ட்விட்டர் சமூக வலைதளங்களுக்கு எதிராக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தொடங்கும் புதிய ட்ருத் சமூக வலைத்தளம் குறித்து பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 ஆம் முறையாக போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியை தழுவினார். இதைத் தொடர்ந்து சில வாரங்களில் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. ட்ரம்ப்பும், அவருடைய ஆதரவாளர்களும் சமூக அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்டதால் அவரது ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுவதாக அதன் நிர்வாகம் தெரிவித்தது. ட்விட்டரில் சுமார் ஒன்பது கோடிப் பேர் ட்ரம்ப்பை பின்தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இதே காரணத்தை கூறி ஃபேஸ்புக்கும் ட்ரம்ப்பின் கணக்குக்கு இரண்டரை ஆண்டுகள் முடக்கியது.

கூகுள் நிறுவனமும் ட்ரம்ப்பின் கணக்குகளுக்கு காலவரையற்ற தடை விதித்துள்ளது. தன்னுடைய சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து டொனால்டு ட்ரம்ப், ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் மீது ஃபுளோரிடாவின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அவர் புதிதாக சமூக வலைதளம் ஒன்றைத் தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 'TRUTH' சோஷியல் மீடியா என்ற இந்த சமூக வலைதளம் அவரது Trump Media & Technology Group நிறுவனத்துக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. முதலில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இந்த வலைதளம், பின்னர் விரிவாக்கப்படும் என கூறப்படுகிறது.

TRUTH சோஷியல் மீடியா தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்றில் பேசிய டொனால்டு ட்ரம்ப், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக செயல்படுவதற்காக இந்தச் சமூக வலைதளத்தை உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். ட்விட்டரில் தாலிபன்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலையில்லாமல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மௌனமாக இருந்து வருகிறார் என்றும் ஒருபோதும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ட்ரம்ப் பேசியுள்ளார். ட்ரூத் சமூக ஊடக தளத்தில், பார்வையாளர்கள் சேருவதற்கான அழைப்பு அடுத்த மாதம் விடுக்கப்படும் என்றும் 2022ஆம் ஆண்டில் தேசிய அளவிலான உறுப்பினர் சேர்க்கை அதில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக புதிய தலைமுறையில் 360 டிகிரி நிகழ்ச்சி முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் இந்த வீடியோ உள்ளன.