பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சா் செபாஸ்டியன் லெக்கோா்னுவை அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் நியமித்துள்ளார்.
பிரான்ஸில், இளம் பிரதமர் என்ற பெயரெடுத்த கேப்ரியல் அட்டல் தனது பதவியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், அதிபரின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி, அதிதீவிர வலதுசாரிகள் கூட்டணி ஆகியவை போட்டியிட்டன. இதில் அதிதீவிர வலதுசாரிகளின் தேசிய பேரணி கட்சி வெற்றி பெற்றது. இதற்கிடையே பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிஷேல் பார்னியர் பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், 2025-ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அதிபர் இமானுவேல் மேக்ரானின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பட்ஜெட்டை நிறைவேற்றுவேன் என்று பிரதமர் பார்னியர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் பார்னியரின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மிஷேல் பார்னியர் தோல்வியடைந்ததால், ஆட்சியை பறிகொடுத்தார். அதன்பிறகு பிரான்சுவா பேரூவை பிரதமராக இமானுவல் மேக்ரான் நியமித்தாா். இந்தச் சூழலில், பிரான்சுவா பேய்ரூ தாக்கல் செய்த பட்ஜெட், பல தரப்பினரையும் அதிருப்தி அடையச் செய்தது. இதனால் முடங்கிய பட்ஜெட் திட்டத்தை நிறைவேற்ற, நாடாளுமன்ற ஆதரவைப் பெற நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு பேய்ரூ அழைப்பு விடுத்தார். அதன்படி, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமராக இருந்த பிரான்சுவா பேரூ தோல்வியடைந்தாா்.
இதனால் பிரதமராகப் பொறுப்பேற்ற 9 மாதங்களில் அவா் பதவி விலக நேரிட்டது. இதையடுத்து மீண்டும் தேர்தல் நடத்துவதைத் தவிர்க்க, அதிபர் மேக்ரான் புதிய பிரதமரை நேற்று அறிவித்தார். அதன்படி, புதிய பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னுவை இமானுவல் மேக்ரான் நியமித்தாா். பிரான்ஸின் இளம் பாதுகாப்பு அமைச்சரான செபாஸ்டியன் லெக்கோா்னு இமானுவல் மேக்ரானின் தீவிர ஆதரவாளர் ஆவார். 2017 முதல் அவரது ஒவ்வோர் அரசாங்கத்திலும் பணியாற்றியுள்ளார். மேக்ரோனின் மையவாத அரசியல் இயக்கத்தில் சேருவதற்கு முன்பு, அவர் ஒருகாலத்தில் பழைமைவாத லெஸ் ரிபப்ளிகன்ஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தார். பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றுவதற்கு முன்பு, லெகோர்னு வெளியுறவு அமைச்சராகவும், பிரதமர் எட்வார்ட் பிலிப்பின் கீழ் வெளியுறவுத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். இந்த நிலையில்தான், பிரான்ஸில் கடந்த 14 மாதங்களில் 4ஆவது புதிய பிரதமராக அவர் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.