E.இந்து
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து புதிய போப்பாண்டவரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
சிஸ்டைன் தேவாலயத்தின் ரகசிய அறையில் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் புதிய போப்பாண்டவரை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கும் முக்கிய நிகழ்வு மே 7ஆம் தேதி தொடங்கியது.
சிஸ்டைன் தேவாலயத்தின் ரகசிய அறையில் 133 கார்டினல்களும் அடுத்த போப்பாண்டவரை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்தனர். போப்பாண்டவரை தேர்ந்தெடுக்காத வரை சிஸ்டைன் தேவாலயத்தின் புகை வெளியேற்றியில் இருந்து கருப்பு நிற புகை மட்டுமே வெளியேறும். போப் தேர்வான பிறகு அந்த புகை வெளியேற்றியில் இருந்து வெள்ளை நிற புகை வெளியாகும்.
அந்த வகையில், மே 7ஆம் தேதி தொடங்கிய புதிய போப்பிற்கான வாக்கெடுப்பு மே 8ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அதன் சாட்சியாக புகை வெளியேற்றியில் இருந்து வெள்ளை நிற புகை வெளியேறியது.
இதையடுத்து, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 267வது போப்பாக ராபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் “போப் 14ஆம் லியோ” என அழைக்கப்படுவார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த போப் ராபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட் (வயது 69), 1955 செப்டம்பர் 14 அன்று பிறந்தார். வார்டிகனின் அதிகாரப்பூர்வ இணையதளம் அமெரிக்காவில் இருந்து தேர்வாகியுள்ள இரண்டாவது போப் இவர் எனத் தெரிவித்துள்ளது.
ராபர்ட் பிரீவோஸ்ட் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை அமெரிக்காவிற்கு வெளியே கழித்துள்ளார். 1982ஆம் ஆண்டு ரோமில் 27 வயதில் திருச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், ரோமில் உள்ள செயிண்ட் தாமஸ் அக்வினாஸ் போன்டிஃபிகல் பல்கலைக்கழகத்தில் நியதிச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பெருவில் இவர் ஒரு திருச்சபைத் தலைவராகவும், ஆசிரியராகவும், மத போதகராகவும் இருந்துள்ளார். தொடர்ந்து, அவர் சர்வதேச மத சமூகமான செயிண்ட் அகஸ்டின் ஆணைக்கு தலைமை தாங்கினார்.
2014ஆம் ஆண்டு சிக்லாயோவின் பிஷப்பாக ஆனார். போப் பிரான்ஸின் இவரை 2023ஆம் ஆண்டு வாடிக்கனுக்கு அழைத்து, உலகளவில் பிஷப்புகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை வழங்கினார். இது ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மிகவும் செல்வாக்கு மிக்க பதவிகளில் ஒன்றாகும்.
போப் பிரான்ஸிஸ் உடனான அவரது நெருக்கமும், அவர் வகித்த உயர் பதிவிகளின் வாயிலாகவும் இவர் அடுத்த போப்பிற்காக தேர்வு செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவர் போப் 14ஆம் லியோவாக தனது முதல் உரையை நிகழ்த்தினார். அதில், “அன்புள்ள சகோதர சகோதரிகளே, கடவுளின் மந்தைக்காகத் தனது உயிரைக் கொடுத்த நல்ல மேப்பரான உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் முதல் வாழ்த்து இது. உங்கள் இதயங்களிலும் பூமியெங்கும் அமைதியின் இந்த வாழ்த்து நுழைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்” என்றுக் கூறினார்.