தென்சீன கடல் பகுதியில் எரியும் தன்மை கொண்ட பனிக்கட்டி வடிவிலான புதிய எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்கு மாற்று எரிபொருளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினமும் 15 லட்சம் பீப்பாய் அளவு குறைந்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்டவைகளின் கையிருப்பு, இன்னும் சுமார் 50 முதல் 100 ஆண்டுகளில் தீர்ந்துவிடும் என கூறப்படுகிறது.
எனவே, மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தென் சீனக்கடல் பகுதியில், பனிக்கட்டி வடிவில் உள்ள எரியும் வகையிலான புதிய எரிபொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதிலிருந்து இயற்கை எரிவாயுவை பிரித்தெடுத்து, எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030 ம் ஆண்டிற்குள் இந்த எரிபொருள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.