ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 50 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை அறிமுகம் செய்து வைத்து, மீண்டும் அதிபராக அவர் பதவியேற்க ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ட்ரம்ப் முன்பாகவே பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு பாகிஸ்தான் என்றும் அவர் கடுமையாக சாடினார்.
அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹவுடி மோடி எனும் பிரமாண்ட நிகழ்ச்சி ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி அரங்கில் நடைபெற்றது. அரங்கதிற்குள் பிரதமர் மோடி நுழைந்ததும், அங்கிருந்த 50 ஆயிரம் இந்தியர்களும் எழுந்து நின்று உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். தொடர்ந்து, அங்கு வந்த மோடி, ட்ரம்பை கைகுலுக்கியபடி மேடைக்கு அழைத்துச் சென்றதும், இரு நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பேசத் தொடங்கிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு உண்மையான நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் ட்ரம்ப் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என்றார். உலக அரசியலில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தையிலும் ட்ரம்ப் பெயர் இடம்பெறுகிறது என்ற மோடி, ஒரு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என்ற நிலையிலிருந்து அமெரிக்க அதிபராக ட்ரம்ப் உயர்ந்துள்ளதை பாராட்டினார்.
பிரதமர் மோடி பேசுகையில், “வெள்ளை மாளிகையில் ட்ரம்பை முதன்முறையாக சந்தித்தபோது, இந்தியா தான் உண்மையான நண்பன் என தெரிவித்தார். தற்போது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், அதனை அதிபர் ட்ரம்ப் நிரூபித்துவிட்டார். இரு நாடுகளின் நட்புறவு தற்போது புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இரு நாட்டு மக்களின் நட்புறவு தொடர்பான இதய துடிப்பை அனைவராலும் தற்போது கேட்க முடியும்.
ஆம் ஆண்டு எனக்கு, உங்களது குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தீர்கள். இன்று எனது இந்திய குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நண்பர்களே, ஒட்டுமொத்த இந்தியாவும், அதிபர் ட்ரம்புடன் நன்கு தொடர்பு கொண்டுவிட்டது. அடுத்த ஆண்டு அமெரிக்க தேர்தல் நடைபெறவுள்ளதால், அவர் வேட்பாளராக மீண்டும் நிற்கிறார். எனவே, அவரை மீண்டும் அதிபராக தேர்வு செய்ய வேண்டும்.
மோடி எப்படி இருக்கிறீர்கள் என கேட்டுள்ளீர்கள்? உங்களுக்கான பதில் இது தான். இந்தியாவில் அனைவரும் நலமாக இருக்கிறோம். ''சப் சங்கா ஸீ'', ''அந்தா பாக உந்தி'', ''எல்லா சென்னா கீரே'', ''எல்லாம் செளக்கியம்''. அமெரிக்காவில் 9/11 தாக்குதல், மும்பையில் 26/11 தாக்குதல் நடத்தியவர்களை தற்போது எங்கே தேடுவது. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளை உருவாக்குபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். பயங்கரவாதத்தை வேரறுக்க அதிபர் ட்ரம்ப் உறுதி பூண்டுள்ளார். அவருக்கு அனைவரும் எழுந்து நின்று ஆதரவு தெரிவிக்க வேண்டும்.”