''விவிஐபி''களுக்கான கழிவறை எனக்கூறி பயோமெட்ரிக் வைத்த பாகிஸ்தான் அரசை இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்
இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பாகிஸ்தானில் விவிஐபி கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்தக் கலாச்சாரம் அரசு அலுவலகங்களுக்கு உள்ளேயே வந்துவிட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர் பாகிஸ்தான் இணையவாசிகள்.
தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் வெளியிட்ட செய்தியின்படி, பாகிஸ்தானின் கைத்தொழில் மற்றும் உற்பத்தி அமைச்சகத்தில் உள்ள கழிவறை விவிஐபிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கழிவறையை கூடுதல் செயலாளர்கள் மற்றும் அதற்கு மேலான உயர் பதவியில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் யாரும் பயன்படுத்தாதவாறு கழிவறையின் வாசலுக்கு வெளியே பயோமெட்ரிக்கும் அமைக்கப்பட்டுள்ளது.
கதவுக்கு அருகே பயோமெட்ரிக் அமைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை போட்டு சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் அரசை அந்நாட்டு மக்களே கிண்டலடித்து வருகின்றனர். விவிஐபி கழிவறையை இன்னும் தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென்றும், கழிவறைக்குள் கேமரா வைத்து பார்க்க வேண்டுமென நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர், கழிவறையை சுத்தம் செய்யவும் விவிஐபிக்கள் தான் வருவார்களா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.