உலகம்

பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்

ஜா. ஜாக்சன் சிங்

"நிறுவனம் வழங்கும் பணிகளை செய்யுங்கள்; அதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் பணியில் இருந்து வெளியேறி விடுங்கள்" என்று தங்கள் பணியாளர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

உலக அளவில் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்றாக அறியப்படுவது நெட்ஃபிளிக்ஸ். புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நிகழ்ச்சிகள் என அனைத்தும் ஒளிபரப்பப்படுவதால் நெட்ஃபிளிக்ஸுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சந்தாதாரர்கள் உள்ளனர்.

இதனிடையே, நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பப்படும் டேவ் சேப்பலின் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு மேற்கத்திய நாடுகளில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் பாலினத்தவரை கேலி செய்யும் விதமாக நகைச்சுவைகள் தொகுக்கப்படுவதால் இதனை தடை செய்ய வேண்டும் என போராட்டங்களும் நடைபெற்றன. இதனிடையே, நெட்ஃபிளிக்ஸ் ஊழியர்களே இந்நிகழ்ச்சிக்கு எதிராக அண்மையில் போராட்டத்தில் குதித்தனர். இது, அந்நிறுவனத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், டேவ் சேப்பலின் நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என நெட்ஃபிளிக்ஸ் அறிவித்தது.

இந்நிலையில், தங்கள் பணியாளர்களுக்கான புதிய விதிமுறைகளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதில், "நமது நிகழ்ச்சிகள் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் எனக் கூற முடியாது. எந்த நிகழ்ச்சி தங்களுக்கு பொருத்தமானது என்பதை நமது பார்வையாளர்களே தேர்ந்தெடுக்கும் வசதியை கொடுத்திருக்கிறோம். எங்களுடன் பணியாற்றும் கலைஞர்களின் கலை ஆற்றலை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பலதரப்பட்ட பார்வையாளர்களுக்காகவே நாங்கள் நிகழ்ச்சிகளை தயாரிக்கிறோம். உங்களுக்கு (பணியாளர்கள்) கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு என்பது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வழங்கும் நிகழ்ச்சிக்காக பணியாற்ற வேண்டும் என்பதே. ஒருவேளை அதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றால், தாராளமாக நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி செல்லலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.