உலகம்

மைக்ரோசாப்ட் உடன் கைகோர்க்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் - என்ன காரணம்?

ச. முத்துகிருஷ்ணன்

மணி ஹெய்ஸ்ட், ஸ்குவிட் கேம் போன்ற உலகத் தரம் வாய்ந்த வெப் சீரீஸ்களை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 1997 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு இணையத்தில் ஸ்டீரிமிங் வசதியை துவங்கிய நெட்ஃப்ளிக்ஸ் பத்தே ஆண்டுகளில், 2017இல் 10 கோடி பேரை பணம் செலுத்த வைத்து வாடிக்கையாளராக மாற்றி இருந்தது. அடுத்த நான்கு ஆண்டுகளில் (2021-ல்) இன்னும் 10 கோடி பேரிடம் காசு வாங்கி தன் வாடிக்கையாளராக மாற்றியது. தற்போது ஒட்டுமொத்தமாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 22.1 கோடியாக இருக்கிறது.

எல்லாமே பெருக்கல் வாய்ப்பாடில் பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தபோது, 2022ஆம் ஆண்டில் ஜனவரி - மார்ச் வரையான மூன்று மாத காலத்தில், நெட்ஃப்ளிக்ஸில் இரண்டு லட்சம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சரிந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவு இது என செய்திகள் வெளியாயின. அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவன பங்குகள், கடந்த அக்டோபர் 2021-ல் வாழ்நாள் உச்சமாக சுமார் 700 டாலரைத் தொட்டு வர்த்தகமானது. 2022 ஜூலை 13ஆம் தேதி வர்த்தக நேர முடிவில் சுமார் 176.56 டாலரில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

தொடர் வீழ்ச்சியை ஈடுகட்ட மலிவு விலைச் சந்தாவை அறிமுகப்படுத்தி மேலும் அதிக பயனர்களை தளத்திற்கு கொண்டு வர நெட்ஃப்ளிக்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக நஷ்டத்தை சந்திக்கவும் வாய்ப்பிருப்பதால் மலிவு விலைச் சந்தாவில் விளம்பரங்களை வீடியோக்களுக்கு நடுவில் தோன்றச் செய்து அதன் மூலம் வருமானம் பார்க்கவும் நெட்ஃப்ளிக்ஸ் முடிவு செய்துள்ளது. இந்த சேவையை வழங்குவதற்காக மைக்ரோசாப்ட் தளத்துடன் கைகோர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய விளம்பர ஆதரவு மலிவு விலைச் சந்தா எப்போது வெளிவரும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சந்தா தொகை பற்றிய விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.

மைக்ரோசாப்ட் நிறுவனம் நெட்ஃபிளிக்ஸின் தொழில்நுட்பம் மற்றும் விற்பனை பங்குதாரராக பெயரிடப்பட்டதில் மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. தங்கள் விளம்பரத் தேவைகளுக்காக மைக்ரோசாப்ட் தேடும் சந்தையாளர்கள் நெட்ஃபிக்ஸ் பார்வையாளர்கள் மற்றும் இணைக்கப்பட்ட டிவி சரக்குகளுக்கான அணுகலைப் பெறுவார்கள். நெட்ஃபிளிக்ஸில் வழங்கப்படும் அனைத்து விளம்பரங்களும் பிரத்தியேகமாக மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் கிடைக்கும்.