Netanyahu in Israel Parliament  Reuters
உலகம்

நெதன்யாகுவுக்கு மெகா பின்னடைவு ஏன்? வாக்குகளை திருடியதா அரபுக் கட்சிகள் ?

இஸ்ரேல் தேர்தலில் பெரும்பான்மை இழந்த நெதன்யாகு கூட்டணி: அரபு கட்சிகள் மீது வாக்கு திருட்டு குற்றச்சாட்டு

PT WEB

செய்தியாளர் - M.மீரா

இஸ்ரேலில் அக்டோபர் 2026-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ( Knesset) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி 53 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காடி ஐசென்காட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.இஸ்ரேல் நாடாளுமன்றமான Knesset இல் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை. ஆனால், எந்தக் கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

benjamin netanyahu

மேலும் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலிலும், அரபு நாடாளுமன்றக் கட்சிகள் (Ra'am மற்றும் Joint List) 19 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் (Likud) கட்சி,அரபு கட்சிகள் வாக்குத் திருட்டில் (Vote-stealing) ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரபு கட்சிகள், இஸ்ரேலிய ஜனநாயகத்தின் தேர்தலைத் திருடிவிட்டன என்று லிகுட் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. வாக்குச் சாவடிகளில் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி வாக்களித்தது, வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்தது, தேர்தல் அதிகாரிகளை மிரட்டியது, தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்காளர்களைத் தூண்டுவதற்குத் தடைசெய்யப்பட்ட மென்பொருட்களைப் பயன்படுத்தியது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை நெதன்யாகுவின் கட்சி முன்வைத்துள்ளது.

Israel Parliament

இது தொடர்பாக நூற்றுக்கணக்கான சாட்சியங்களையும் ஆதாரங்களையும் இஸ்ரேல் காவல்துறை, சின் பெட் (Shin Bet) பாதுகாப்பு அமைப்பு மற்றும் மத்திய தேர்தல் குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகக் கட்சி தெரிவித்தது.

நெதன்யாகுவின் லிகுட் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுகளை அந்நாட்டு போலீசார் நிராகரித்துள்ளனர். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததற்கான எந்தவொரு உளவுத்துறை அல்லது புலனாய்வு ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்றும், கடந்த தேர்தல்களை விட இந்த முறை தேர்தல் புகார்கள் 40% வரை குறைவாகவே பதிவாகியுள்ளன என்றும் காவல்துறை தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.