protest against israel  Reuters
உலகம்

'மக்களைக் கொல்வது நெதன்யாகுவின் பொழுதுபோக்கு..' இஸ்ரேலுக்கு எதிராக வெடித்த போராட்டம்!

நெதன்யாகுவைக் கைது செய்ய வேண்டும் என இஸ்ரேலுக்கு எதிராக வெடித்த போராட்டம் வெடித்துள்ளது.

PT WEB

காசா போர் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஐரோப்பாவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. பெர்லின், லண்டன் நகரங்களில் நடந்த போராட்டங்களில், இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் நடவடிக்கைகளை கண்டித்து பலர் குரல் கொடுத்தனர். பதற்றம் அதிகரித்த நிலையில், போலீசார் பலரை கைது செய்தனர்.

செய்தியாளர் - M.மீரா

காசா போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக ஐரோப்பாவின் பல பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஜெர்மனியின் பெர்லின், பிரிட்டனின் லண்டன் ஆகிய நகரங்களில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். அரசின் தலைமை அலுவலகத்துக்கு அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பாலஸ்தீனக் கொடிகளுடன் ஈரான் கொடிகளையும் சிலர் ஏந்தியிருந்தனர்.

protest against israel

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் படத்துடன் கூடிய பதாகைகளும் அங்கு காணப்பட்டன. காசாவில் இஸ்ரேல் நடத்தும் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஜெர்மனி ஆதரவு அளிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஜெர்மனி உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இஸ்ரேலுக்கு அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ ஆதரவு வழங்குவதை நிறுத்துவதுடன், அந்நாட்டின் மீது தடைகள் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு எதிராகவும் சிலர் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. சில பாலஸ்தீன ஆதரவாளர்களைப் போலீசார் தடுத்து அழைத்துச் சென்றதாகவும் வீடியோ காட்சிகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் தலைநகர் லண்டனிலும் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் எதிரெதிராக நின்று முழக்கங்களை எழுப்பினர்.

protest against israel

இஸ்ரேல் ஆதரவாளர்கள் இஸ்ரேல் கொடிகளை ஏந்தியிருந்தனர். பாலஸ்தீன ஆதரவாளர்கள் பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். நிலைமை மோசமடையாமல் இருக்க போலீசார் இரு தரப்பினருக்கும் இடையே நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரீமா ஹசன், ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் கொடியை அகற்றினார். காசாவில் நடக்கும் போர் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பாகத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தவே இதைச் செய்ததாக அவர் தெரிவித்தார். பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில், காசா போர் தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஐரோப்பாவிலும் தீவிரமடைந்து வருகின்றன. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ஆதரவு, ஆயுத விநியோகம் மற்றும் பாலஸ்தீனர்களின் உரிமைகள் தொடர்பான விவாதங்கள் அரசியல் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.