இஸ்ரேல் அரசியலில் புதிய திருப்பமாக, ஐசன்கோட் மற்றும் நெதன்யாகு தேசிய ஒற்றுமை கூட்டணி அரசை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். ஐசன்கோட் முதலில் பிரதமராக பதவி வகிக்க, நெதன்யாகு மாற்றுப் பிரதமராக இருப்பார். ஆனால், ஐசன்கோட் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அரசியல் சிக்கல்கள் தொடர்கின்றன.
கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கட்சி கூட்டணி 53 இடங்களிலும், முன்னாள் ராணுவத் தளபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான ஐசன்கோட்டின் கூட்டணி 48 இடங்களிலும் வென்றது.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 19 இடங்களில் வென்ற அரபு கட்சிகளான ஜாயிண்ட் லிஸ்ட் (Joint List) மற்றும் ராம் (Raam) கட்சிகள் தங்கள் ஆதரவை ஐசென்கோட்டிற்கு (Gadi Eisenkot) வழங்க முன்வந்துள்ளதால், அவரது கூட்டணிக்கு 67 இடங்கள் கிடைத்தது. இதனால் அவருக்கு ஆட்சியமைக்க தேவையான 61 இடங்கள் கிடைத்ததால் இஸ்ரேல் அதிபர் அவரை பதவியேற்க அழைப்பை விடுத்தார்.
ஆனால், ஐசென்கோட்டின் கூட்டணியில் உள்ள சில கட்சியின் தலைவர்கள் அரபு கட்சிகளின் ஆதரவை ஏற்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கு புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. இதனிடையே பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுத் கட்சியோடு ஐசென்கோட் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தேசிய ஒற்றுமை கூட்டணி என்ற பெயரில் ஐசன்கோட் ஆட்சியமைக்க லிகுத் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், நேற்று பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில், தேசிய ஒற்றுமை கூட்டணி அரசு அமைவதற்காக, பதவிக்காலத்தின் தொடக்கத்தில் காடி ஐசன்கோட் பிரதமராகப் பதவி வகிப்பார் என்றும், தான் மாற்றுப் பிரதமராக இருப்பேன் என்றும் நெதன்யாகு கூறியுள்ளார். மேலும் பெரிய கட்சி முதலில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற வழக்கமான மரபைத் தாம் ஒதுக்கி வைத்து, ஒற்றுமைக்காக இந்த விட்டுக்கொடுப்பை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நெதன்யாகு முழுமையாகப் பதவியை இழப்பதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் மீண்டும் பிரதமர் பதவிக்கு வருவதற்காக இப்படி ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளதாக அரசியல் விமர்சர்களால் பார்க்கப்படுகிறது. அதே நேரம் ஐசன்கோட் கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சியான 'டெமாக்ரட்ஸ்' தலைவர் யாயிர் கோலன்(Yair Golan), 'இஸ்ரேல் பீட்டீனு' கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன் (Avigdor Liberman) மற்றும் முன்னாள் பிரதமர் எஹுத் பராக் (Ehud Barak ) ஆகியோர், நெதன்யாகுவின் இந்த அறிவிப்பை மாற்றத்தைத் தாமதப்படுத்தும் நாடகர் என கடுமையாக விமர்சித்துள்ளனர். இப்படி பட்ட சூழலில் ஐசன்கோட் எடுக்கப்போகும் முடிவுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.