Nepal flood Reuters
உலகம்

நேபாளத்தில் உச்ச கட்ட சோகம்! உறவினர்களுக்கு தெரியாமல் புதைக்கப்படும் உடல்கள்! என்ன நடக்கிறது?

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல்கள் அழுகி வருவதால், தொற்று அபாயத்தைத் தவிர்க்க அவற்றை அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

PT WEB

நேபாளத்தில் திடீர் வெள்ளம் 700க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட நிலையில், அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்கள் அழுகி தொற்று அபாயம் அதிகரித்ததால் அரசு அவற்றை உறவினர்களுக்கு தெரியாமல் 1.5 மீட்டர் ஆழத்தில் அடக்கம் செய்ய தொடங்கியுள்ளது. ஒவ்வொரு உடலுக்கும் DNA மாதிரி, தனி எண், புகைப்படம், புவியியல் தகவல் பதிவு செய்யப்படுகிறது.

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

கண்ணிமைக்கும் நேரத்தில் பனிப்பாறை பிரளயமாய் வெடித்து புரண்டு வந்த பெருவெள்ளம், வீடுகள், உடைமைகள், கிராமங்களோடு சேர்த்து பல நூறு உயிர்களையும் வாரி சுருட்டி விழுங்கி விட்டது. நேபாள பெருவெள்ளம் அந்நாட்டை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியிருக்கிறது என்பது தான் கசப்பான உண்மை.

நேபாளத்தில் கடந்த 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உடல்கள் அழுகத் தொடங்கியுள்ளதுடன், தொற்று ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Nepal flood victims

புதன்கிழமை காலை, சுனாமியைப் போன்ற வேகத்தில் சேறும் சகதியும் கலந்த வெள்ளநீர் கிராமங்கள் மற்றும் நகரங்களைச் மூழ்க்கடித்ததை தொடர்ந்து இதுவரை 700க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்திய எல்லையை ஒட்டிய தெற்கு மாவட்டமான சித்வானில் மட்டும் அதிகபட்சமாக 233 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

சித்வானில் மருத்துவமனைகளில் போதிய இடவசதி மற்றும் குளிர்சாதன வசதிகள் இல்லாததால், உடல்களைப் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதுடன், அவை தொடர்ந்து அழுகி வந்ததால் தொற்று அபாயம் அதிகரிக்கலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்தனர். இதையடுத்து, உடல்களை அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் சனிக்கிழமை முடிவு செய்தது.

உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பு DNA மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு உடலுக்கும் தனித்துவமான அடையாள எண் மற்றும் சடலம் மீட்கப்பட்ட இடம் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன.

Nepal flood rescue team

உடல்கள் பின்னர் எளிதாக தோண்டி எடுக்கப்படும் வகையில் 1.5 மீட்டர் ஆழத்தில் அடக்கம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு உடலுக்கும் இடையே 40 செ.மீ. இடைவெளியும் விடப்படுகிறது. இதனால் DNA பரிசோதனையில் அடையாளம் காணப்படும் குறிப்பிட்ட உடலை மட்டும் தோண்டி எடுக்க முடியும். அடக்கம் செய்யும் பணிகள் புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு, அந்த இடத்தின் புவியியல் அமைவிடமும் பதிவு செய்யப்படுகிறது.

காணாமல் போன உறவினர்களைத் தேடுபவர்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் DNA மாதிரிகளை வழங்க வேண்டும். பின்னர் அவை உடல்களில் சேகரிக்கப்பட்ட DNA-வுடன் ஒப்பிடப்பட்டு, அடையாள எண் கண்டறியப்படும். அந்த எண்ணின் அடிப்படையில், போலீஸார் பதிவுகளைச் சரிபார்த்து உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை கண்டறிவார்கள். பின்னர் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்கள் குறித்த விவரங்களையும் நேபாள போலீஸார் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இதுவரை வெளிநாட்டினர் உட்பட 2,426 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.