உலகம்

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: நவம்பரில் புதிய தேர்தல் அறிவிப்பு

Veeramani

நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி வெள்ளிக்கிழமை நள்ளிரவில், நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து ஆறு மாதங்களில் புதிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார்.

காபந்து பிரதமர் கே.பி. சர்மா ஓலி தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12 முதல் 18 வரை தேர்தல்கள் நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசாங்கத்தை அமைக்க சர்மா ஓலி கோரிக்கை வைத்திருந்த நிலையில், சட்ட ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்திருக்கிறார்.

நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தியூஜா தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடியாமல் போனதால் ஓலி சமீபத்தில் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஓலி தனது 153 ஆதரவாளர்களின் பட்டியலை சமர்ப்பித்திருந்தார். இந்த எண்ணிக்கை தியூஜாவின் ஆதரவு எண்ணிக்கையை விட நான்கு பேர் அதிகமாகும். இந்த பட்டியலில் பல எதிர்ப்பாளர்களின் பெயர்களையும் சேர்த்துக் கொண்டார் ஓலி.

நேபாளி காங்கிரஸ், மாவோயிஸ்ட் கட்சி, சமாஜ்பாடி ஜனதா கட்சியின் ஒரு பகுதியும், ஓலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பாளர்களும், ஒருங்கிணைந்த மார்க்சிச / லெனினிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி ஓலியின் அரசாங்கத்தை தக்க வைத்துக் கொண்டால் பரவலான போராட்டங்களை நடத்தப்போவதாக எச்சரித்திருந்தன.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் 39 மாதங்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்ற ஓலியின் அரசு, தனது சொந்தக் கட்சியில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து மைனாரிட்டி அரசாக மாறியது. இவர்களின் கூட்டணியிலிருந்து மாவோயிஸ்ட் கட்சியும் வெளியேறியதால் பதவியிலிருந்து விலகும் சூழல் ஓலிக்கு ஏற்பட்டது.