உலகின் உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவெரெஸ்ட் சிகரம் கருதப்படுகிறது. கடல் மட்டத்துக்கு மேல் 8,848 மீட்டர்கள் (29,028 அடி) உயரம் கொண்டது. த்ரில் அனுபவங்களை விரும்பும் மலையேற்ற வீரர்களின் கனவாக எவரெஸ்ட் இருக்கிறது. ஒரு முறையாவது எவரெஸ்ட்டில் ஏறிவிட வேண்டுமென்பதே சாகச விரும்பிகளின் கனவு. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்களும் அவர்களுக்கு உதவியாக உள்ளூர் ஷெர்பாக்களும் செல்கின்றனர்.
இப்படி மலையேறுபவர்கள் ஆக்ஜிசன் குடுவை, மதுபாட்டில்கள், உணவுப் பொட்டல வகைகள், மருத்துவ பொருட்கள் என பல பொருட்களை கையோடு எடுத்துச் செல்கின்றனர். ஆனால் அவற்றை பயன்படுத்திவிட்டு அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். இதனால் எவெரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் எவரெஸ்ட்டை சுத்தம் செய்யும் பணியை நேபாள அரசு தொடங்கியது.நேபாள ராணுவத்தினரின் இணைந்து கடந்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதியில் இருந்து சுகாதாரக் குழுவினர் எவரஸ்ட்டில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் எவரெஸ்ட்டில் இருந்து சுமார் 5000 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.அந்நாட்டு சுற்றுலாத்துறை இயக்குநர் தண்டுராஜ் கிமைர் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது வரை சுமார் 5000 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 10 ஆயிரம் கிலோ குப்பைகளை சேகரிக்க வேண்டுமென்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.