Nepal Flood Reuters
உலகம்

சேற்றுக்குள் சிக்கிய உயிர்கள்! நேபாள ராணுவம் வெளியிட்ட வீடியோ! இப்படியும் ஒரு மீட்புப் போராட்டமா?

நேபாளத்தில் பிரார்த்தனைகள் முதல் நவீன தொழில்நுட்பம் வரை எல்லாவற்றின் நோக்கமும் ஒன்று தான். அது 'முடிந்தவரை உயிர்களைக் காப்பாற்றுவது' என்பதே. அப்படிப்பட்ட உயிர்காக்கும் மீட்புக் குழு ஒன்றின் போராட்ட பயணத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PT WEB

இமயமலை எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளம், நிலச்சரிவால் நேபாளத்தின் வடக்கு மாவட்டங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. சுமார் ஆயிரம் பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோர் காணாமல் போன நிலையில், சேற்றால் நிரம்பிய குறுகிய சுரங்கங்களில் ஊர்ந்து சென்று உயிர்களை தேடும் ராணுவத்தின் வீடியோ உலக கவனத்தை ஈர்த்துள்ளது; துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உதவி தொடர்கிறது.

செய்தியாளர்: ஐடா அருட்செல்வி

நேபாளத்தின் வடக்குப் பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதைந்துபோன சுரங்கங்களுக்குள் அடர்த்தியான சகதிக்கு இடையே மீட்புக் குழுவினர் ஊர்ந்து சென்று உயிருடன் இருப்பவர்களைத் தேடும் காட்சிகளை நேபாள ராணுவம் வெளியிட்டுள்ளது.

இமயமலை எல்லைப் பகுதிகளை ஒட்டிய ஆறுகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர். மேலும், மலைப் பகுதிகளில் உள்ள பல கிராமங்கள் வெளியுலக தொடர்பின்றி துண்டிக்கப்பட்டுள்ளன.

Nepal Flood

ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் உள்ள திரிசூலி, போதே கோஷி ஆற்றுப் பகுதிகளில் மீட்புப் பணிகள் மிகவும் சவாலானதாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் நிலச்சரிவுகள் மற்றும் சேற்றுப் பெருவெள்ளத்தால் பல நீர்மின் நிலையங்களின் பகுதிகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அங்கு பணியாற்றிய நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் நிலை குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

சேற்றால் நிரம்பிய குறுகிய சுரங்கப் பாதைகளுக்குள் மீட்புக் குழுவினர் சென்று தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். சுரங்கங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளைக் கண்டறிவதே மிகப்பெரிய சவாலாக இருப்பதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. உள்ளே சிக்கியுள்ளவர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்பதே தங்களின் முதன்மையான நோக்கம் என்றும் கூறியுள்ளது.

Nepal Flood

மீட்புப் பணிகளில் கனரக இயந்திரங்கள், காற்றை வெளியேற்றும் கருவிகள், சிறப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேவையான இடங்களில் சிறிய அளவிலான வெடிப்புகள் மூலம் சுரங்கங்களுக்குள் புதிய வழித்தடங்களும் உருவாக்கப்படுகின்றன.

நேபாளத்திற்கு உதவியாக இந்தியா மற்றும் சீனாவும் சுரங்க மீட்பு நிபுணர்கள் உள்ளிட்ட சிறப்புக் குழுக்களை அனுப்பியுள்ளன.

இதனிடையே, தொடர் மழை, ஆறுகளின் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள் மற்றும் சேதமடைந்த பாலங்களால் மீட்புப் பணிகளுக்கு சிக்கல் நீடிக்கிறது. துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு ராணுவம் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.