அண்டை நாடான நேபாளம் தொடர் கனமழை, கடுமையான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், அந்த நாட்டில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை குறைந்தபட்சம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 11 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலையோரப் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் பீதியூட்டும் காட்சிகள் வெளியாகி, மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் மொத்தமுள்ள 77 மாவட்டங்களில் 49 மாவட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் மிக அதிகமாக இருப்பதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். முக்கிய நதிகள் மற்றும் அவற்றின் உபநதிகளில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டியிருப்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல இடங்களில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களுக்கும் மழை நீடிக்கக்கூடும் என்பதால், மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.