நேபாள வெள்ளம் Pt web
உலகம்

நேபாள வெள்ளத்தில் காணாமல் போன மகன்.. 2000 ரூபாய் கடன்; காத்மாண்டு பயணம்.. தந்தையின் பாசப்போராட்டம்!!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் காணாமல் போன தனது ஒரே மகனை, 50 வயதைக் கடந்த தந்தை ஒருவர் வெறும் 2,000 நேபாள ரூபாய்க்கும் குறைவான பணத்தை கடனாகப் பெற்று, பல நாட்களாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடந்துசென்று தேடி வருகிறார்.

Premkumar S

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நேபாளம் சீனா எல்லைப் பகுதியில் உள்ள திபெத் பகுதியில், இமயமலையில் பனிப்பாறை சரிவு காரணமாக நேபாளத்தின் போதே கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல மீட்டர் உயரத்திற்கு நீர் பெருக்கெடுத்து பாய்ந்ததில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 4,000 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள், மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், வெள்ளத்தில் காணாமல் போன தனது ஒரே மகனைத் தேடி, 50 வயதைக் கடந்த தந்தை ஒருவர் மேற்கொண்டு வரும் பயணம் நெஞ்சை உலுக்குவதாக அமைந்திருக்கிறது.

நேபாள வெள்ளம்

நேபாளத்தின் சப்தரி (Saptari) மாவட்டத்தைச் சேர்ந்தவர் தல்கா சதா. இவரது ஒரே மகன் 19 வயதான வினோத். கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி வடக்கு நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இருந்து வினோத் காணாமல் போயிருக்கிறார்.

வெள்ளம் ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ராசுவா மாவட்டத்தில் உள்ள நீர்மின் நிலையத்தில் கூலி வேலை செய்வதற்காக வினோத் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சிமெண்ட் கலப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை வினோத் செய்து வந்துள்ளார். இந்நிலையில், வெள்ளம் ஏற்படுவதற்கு முந்தைய நாள்தான் தந்தை தல்கா சதா தனது மகனிடம் கடைசியாக பேசியிருக்கிறார். அதன்பிறகு வினோத்திடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

இதையும் படிக்க: சக்கரங்கள் சொல்லும் கதை – 6 | பேட்டரி இதயம் சார்ஜிங் உயிர்நாடி! (EV-யின் ‘கரன்ட்’ ரகசியங்கள்!

இதையடுத்து, கவலையடைந்த தல்கம் சதா தனது மகனைத் தேடுவதற்காக, தனது சகோதரருடன் சேர்ந்து சப்தரியில் இருந்து காத்மாண்டு சென்றிருக்கிறார். சுமார் 292 கிலோமீட்டர் தூரம் பேருந்தில் பயணம் செய்து அங்கு சென்ற அவர்கள், மருத்துவமனைகளுக்குச் சென்று வெள்ளத்தில் மீட்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பட்டியலிலும் வினோத்தின் பெயரைத் தேடியுள்ளனர். ஆனால், எந்த மருத்துவமனையிலும் வினோத்தின் பெயரோ, புகைப்படமோ கிடைக்கவில்லை. இதையடுத்து, மகன் வேலை செய்ததாக கூறப்படும் நீர்மின் நிலையத்திற்கு அருகில் உள்ள நுவாகோட் நோக்கி அவர்கள் நடக்கத் தொடங்கினர்.

நேபாள வெள்ளம்

காத்மாண்டுவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நுவாகோட் உள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் வழியாக பல மணி நேரம் நடந்திருக்கிறார் வெள்ளத்தில் காணாமல் போன வினோத்-ன் தந்தை சதா. இதில் மற்றுமொரு குறிப்பிடும் படியான விஷயம் என்னவென்றால், அவரது பையில் இருந்த பணம் 2,000 நேபாள ரூபாய்க்கும் குறைவு. அதாவது சுமார் 1,200 ரூபாய் மட்டுமே. மகனைத் தேடுவதற்காக இந்தப் பணத்தையும் கடனாகப் பெற்றிருக்கிறார். அந்தக் கடனுக்கும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 20 ரூபாய் வட்டி செலுத்த வேண்டும். அந்தப் பணத்திலும் காத்மாண்டுவில் தங்குவதற்காக 1500 ரூபாயை செலவிட்டிருக்கின்றனர். அங்கு அவர்களுக்கு சிறிதளவு உணவே கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒருபுறம் பசி.. மறுபுறம் பணம் இல்லை.. ஆனால் மகனைத் தேடும் முயற்சியை மட்டும் அவர் கைவிடவில்லை. இதுகுறித்துப் பேசியுள்ள சதா, மகனைத் தேடுவதற்காக மருத்துவமனைகள், ராணுவ முகாம்கள் என பல இடங்களுக்கும் சென்றோம். ஆனால், தங்களுக்கு உரிய உதவி கிடைக்கவில்லை வேதனை தெரிவிக்கிறார். மேலும், "என் மனைவி, நம்முடைய மகனை அழைத்து வந்துவிடுங்கள் என்று என்னிடம் கூறினார். அதற்காகத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்" எனவும் கண்ணீருடன் கூறுகிறார்

தனது மகன் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையுடன், வயதையும் பொருட்படுத்தாமல், பணம் இல்லாமலும், வெள்ளத்தால் சேதமடைந்த பாதைகளிலும் தந்தை தல்கா சதா தேடி வரும் சம்பவம் காண்போரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்திருக்கிறது.