மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானின் டான் நாளிதழுக்கு நவாஸ் ஷெரிப் அளித்துள்ள பேட்டியில், கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் 166 பேரை பலிவாங்கிய பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளார். மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான் ஏன் அனுமதி அளிக்க வேண்டும்? எதற்காக இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது? என பாகிஸ்தான் அரசுக்கு நவாஸ் ஷெரிப் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிறநாடுகளில் பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்ற அனுமதி அளிப்பதை ஒரு போதும் ஏற்கமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன என இந்தியா தொடர்ந்து கூறும் குற்றச்சாட்டையும் நவாஸ் ஷெரிப் ஒப்புக் கொண்டுள்ளார். சர்வதேச அரங்கில் ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட பாகிஸ்தானுக்கு கிடைக்காதது ஏன் என ஆராய வேண்டும் எனவும் நவாஸ் கூறியுள்ளார்.