weapons depot  Reuters
உலகம்

அடுத்தடுத்து வெடித்து சிதறும் NATO ஆயுதக் கிடங்குகள்! அச்சத்தில் ஐரோப்பா... பின்னணியில் யார்?

பல்கேரியாவில் NATO ஆயுதக் கிடங்கில் நள்ளிரவு தீ, தொடர் வெடிப்புகள்; உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் தளங்கள் ரஷ்ய உளவு அமைப்புகளின் குறியாகிறதா என்ற சந்தேகம் தீவிரமடைந்துள்ளது.

PT WEB

பல்கேரியாவின் Tarva Levada அருகே உள்ள NATO ஆயுதக் கிடங்கில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ மற்றும் தொடர் வெடிப்புகள், உயிரிழப்புகள் ஏதுமின்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதே நிறுவனத்துடன் தொடர்புடைய மற்ற கிடங்கிலும் முன்பு வெடிப்பு நடந்தது. ரஷ்ய உளவு அமைப்புகள், உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் கிடங்குகளை குறிவைத்து நாசம் செய்யப்படுகிறதா? என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது.

செய்தியாளர் - M.மீரா

NATO கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்கேரியாவில் ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ மற்றும் வெடிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தின் காட்சிகள், இரவு வானமே தீப்பிழம்புகளால் ஒளிரும் அளவுக்கு பதற்றமாக இருந்துள்ளது

பல்கேரியாவின் மத்திய பகுதியில் உள்ள Tarva Levada கிராமம் அருகே இந்த ஆயுத சேமிப்பு தளத்தில் தீ ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ ஒரு கிடங்கிலிருந்து மற்றொரு கிடங்குக்கு பரவியதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்பட்டபோதிலும், இதுவரை உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nato

கிடங்கில் துப்பாக்கித் தூள் மற்றும் வெடிமருந்துகள் இருந்ததாக ஆரம்ப தகவல்கள் கூறினாலும், அங்கு சரியாக என்ன சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதி செய்ய வேண்டியுள்ளது.

இந்த சம்பவம் முக்கியத்துவம் பெறுவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. இதே நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றொரு ஆயுத சேமிப்பு கிடங்கில் சில வாரங்களுக்கு முன்பும் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய ஆயுத வியாபாரி Emilian Gebrev, கடந்த காலங்களில் ரஷ்ய உளவு அமைப்புகளின் தாக்குதல் குற்றச்சாட்டுகளின் மையமாக இருந்துள்ளார். 2011 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஆயுதக் கிடங்குகளில் ஏற்பட்ட பல வெடிப்புகள் ரஷ்யா நடத்தியது என்று பல்கேரிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த கிடங்குகளில் உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

weapons depot

இதற்கிடையே, இத்தாலியின் Rome அருகே உள்ள Colleferro பகுதியில் KNDS Ammo Italy நிறுவனத்தின் வெடிமருந்து தொழிற்சாலையிலும் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. தீப்பற்றியதைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்த வெடிப்பில் உயிரிழப்புகள் இல்லை என்றாலும், தொழிற்சாலை வளாகத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை நடுத்தர மற்றும் பெரிய அளவிலான வெடிமருந்துகளையும், விண்வெளி ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் திட எரிபொருட்களையும் தயாரிக்கிறது. உக்ரைனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்த நிறுவனத்தின் உற்பத்திக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பல்கேரியா, இத்தாலி, செக் குடியரசு, எஸ்டோனியா, லிதுவேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சமீபத்திய தீ மற்றும் வெடிப்பு சம்பவங்கள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

Putin

ரஷ்யா நேரடியாக NATO நாடுகளைத் தாக்காமல், உள்ளூர் நபர்களை பயன்படுத்தி தீவைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு உக்ரைனின் ஆயுத விநியோகச் சங்கிலியை சீர்குலைக்க முயற்சி செய்யலாம் என்ற அச்சமும் மேற்கத்திய உளவு அமைப்புகளிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், பல்கேரியாவின் இந்த சமீபத்திய தீ விபத்தோ அல்லது இத்தாலி வெடிப்போ ரஷ்யாவின் திட்டமிட்ட தாக்குதல் என்பதற்கு இதுவரை உறுதியான ஆதாரம் இல்லை.

ஆனால், உக்ரைன் போரின் பின்னணியில் NATO நாடுகளில் ஆயுத உற்பத்தி மற்றும் சேமிப்பு மையங்களில் அடுத்தடுத்து ஏற்படும் தீ மற்றும் வெடிப்புகள், ஐரோப்பாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு புதிய கவலையை உருவாக்கியுள்ளன. இது வெறும் விபத்துகளின் தொடரா... அல்லது ஐரோப்பாவுக்குள் ரஷ்யாவால் நடத்தப்படும் ஒரு அமைதியான ‘Shadow War’-ன் அறிகுறியா? என்ற கேள்வி தற்போது தீவிரமடைந்துள்ளது.