Natanz Nuclear facility , iran  web
உலகம்

”நடான்ஸ் அணு உலை மீது மீண்டும் தாக்குதல்; கசிவு எதுவும் இல்லை” - ஈரான் விளக்கம்!

ஈரானின் நடான்ஸ் அணு ஆயுத செறிவூட்டல் நிலையம் இன்று வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் மிசன் தெரிவித்துள்ளது.

PT WEB

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் நடான்ஸ் அணு ஆயுத செறிவூட்டல் நிலையம் இன்று வான்வழித் தாக்குதலில் தாக்கப்பட்டதாக, ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மிசான் தெரிவித்துள்ளது. கதிர்வீச்சுக் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஈரான் கூறியுள்ளது. ஈரானின் முக்கிய செறிவூட்டல் தளமான நடான்ஸ், போரின் முதல் வாரத்திலேயே அமெரிக்கப்படைகளால் தாக்கப்பட்டிருந்தது. அந்த முந்தைய தாக்குதலால் "எந்தவொரு கதிரியக்க விளைவும்" ஏற்படவில்லை என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு கூறியிருந்தது. இந்த சூழலில் தான், இன்று மீண்டும் தாக்கப்பட்டிருந்தது.

Natanz Nuclear facility , iran

ஈரானின் தெஹ்ரானுக்கு தென்கிழக்கே சுமார் 220 கிலோமீட்டர் (135 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இந்த அணுசக்தி நிலையம், ஜூன் 2025-இல் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்த 12 நாள் போரின்போது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களாலும், அமெரிக்காவாலும் குறிவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான், தற்போது அமெரிக்கா மேலும் மூன்று நீர்நிலத் தாக்குதல் கப்பல்களையும், சுமார் 2,500 கூடுதல் கடற்படை வீரர்களையும் அப்பகுதிக்கு அனுப்பி வருகிறது.

முன்னதாக, மத்திய கிழக்கில் தனது இராணுவ நடவடிக்கைகளை "குறைப்பது" குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஒரு நாள் கழித்து அணு செறிவூட்டல் மையம் மீது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Natanz Nuclear facility , iran

முன்னதாக, எண்ணெய் விலையில் ஏற்பட்ட மற்றொரு உயர்வால் அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, விண்ணை முட்டும் எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்டிருந்த ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்து இருந்தது.

ஈரான் அச்சுறுத்தல்

நவ்ரூஸ் பண்டிகையை முன்னிட்டு ஈரானிய தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையில், ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, போரை எதிர்கொள்வதில் ஈரானியர்களின் உறுதியைப் பாராட்டினார். ஈரானின் உயர்மட்டத் தலைவர்களைக் கொல்வதன் மூலம் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடலாம் என்ற மாயையின் அடிப்படையிலேயே அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும் அவர் கூறினார்.

மொஜ்தபா காமேனி

ஈரானின் உயர்மட்ட இராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அபோல்ஃபாஸ்ல் ஷெகார்ச்சி, வெள்ளிக்கிழமை அன்று, உலகெங்கிலும் உள்ள "பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள்" நாட்டின் எதிரிகளுக்குப் பாதுகாப்பாக இருக்காது என்று எச்சரித்தார். இந்த அச்சுறுத்தல், ஒரு அழுத்த உத்தியாக மத்திய கிழக்குக்கு அப்பால் தாக்குதல்களை ஈரான் நடத்துமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது