உலகம்

இருள் சூழ்ந்த நீச்சல் குளத்தில் விண்வெளி வீரர்கள் பயிற்சி: வினோதமான படத்தை பகிர்ந்த நாசா

EllusamyKarthik

அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு வரும் பயிற்சி சார்ந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. இந்த படங்கள் தற்போது பரவலான இன்ஸ்டா பயனர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் நிலவுக்கு பயணிக்க உள்ள விண்வெளி வீரர்கள் மேற்கொண்டுள்ள பயிற்சியின் படங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“இருள் சூழ்ந்த மிகவும் ஆழமான நீச்சல் குளத்தில் நிலவுக்கு செல்ல உள்ள வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். Neutral Buoyancy ஆய்வகத்தில் வீரர்கள் மேற்கொண்டுள்ள அண்மைய பயிற்சியின் படங்கள் இவை. இந்த ஆய்வகத்தில் விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்வாக் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். விரைவில் மூன்வாக் கூட மேற்கொள்ள உள்ளனர். 

நாசா Artemis திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்கள் நிலவின் தென் துருவ பகுதிக்கு செல்லும் போது இருள் சூழ்ந்திருக்கும். இங்கு சூரியனின் வெளிச்சம் இருக்காது. அதனால் அந்த சூழலுக்கான பயிற்சியை வீரர்கள் இந்த ஆய்வகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். வழக்கமாக நீச்சல் குளத்தில் பயன்படுத்தப்படும் ஃபில்டர் மணலுடன் சில சிறப்பு கலவைகள் சேர்க்கப்பட்டுள்ளன” என நாசா தெரிவித்துள்ளது. 

இந்த பதிவு சுமார் 1 மில்லியன் லைக்குகளை நெருங்கி வருகிறது. அதோடு பயனர்கள் பல விதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.