உலகம்

செவ்வாய் கிரகத்தில் சிறிய ரக ஹெலிகாப்டரை பறக்கவிட்டு நாசா விஞ்ஞானிகள் சாதனை!

webteam

விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை படைத்திருக்கும் நாசா, செவ்வாய் கிரகத்தில் சிறிய ரக ஹெலிகாப்டரை பறக்கச் செய்து சாதனைப் படைத்துள்ளது.

பூமியை தவிர மற்ற கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்குமா? ஆனால் பறக்க வைத்திருக்கிறது நாசா விண்வெளி மையம். ஆம், நாசா விஞ்ஞானிகள் 1.8 கிலோ ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்தில் பறக்கச் செய்துள்ளனர். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய பிரசர்வென்ஸ் ரோவர் தன்னுடன் குட்டி ஹெலிகாப்டர் ஒன்றையும் கொண்டு சென்றது.

INGENUITY என பெயரிடப்பட்ட அந்த ஹெலிகாப்டர் முதன்முறையாக செவ்வாய் கிரகத்தில் பறந்து சாதனைப் படைத்துள்ளது. ஒரு நிமிடத்துக்கும் குறைவாக சுமார் 3 மீட்டர் வரை ஹெலிகாப்டர் பறந்த நிலையில், நாசா விஞ்ஞானிகள் கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது குறித்து INGENUITY திட்ட இயக்குநர் மிமி ஆங் கூறும் போது, “வேற்று கிரகத்தில் ஹெலிகாப்டர் மூலம் மனிதர்களை பறக்கவைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. ரைட் சகோதரர்கள் முதல் முதலில் பூமியில் விமானத்தை இயக்கியது போன்று மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

முற்றிலும் தன்னிசையாகவே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள INGENUITY ஹெலிகாப்டர், ரோவர் வழியாக பூமியுடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளும். முதல்கட்டமாக ஹெலிகாப்டர் பறந்த தரவுகளை ரோவர் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் மீண்டும் இந்த ஹெலிகாப்டரை பறக்க செய்யவோம் என விஞ்ஞானிகள் உறுதி தெரிவிக்கின்றனர்.