Nasa flight  NASA
உலகம்

50,000 அடி.. 3 நிமிட இருள்! சூரிய கிரகணத்தை வானிலேயே துரத்தும் NASA!

இதற்காக ஐஸ்லாந்தின் கெஃப்லாவிக் (Keflavik) விமான நிலையத்திலிருந்து, நாசாவின் WB-57 ரக அதிநவீன ஆராய்ச்சி விமானம் புறப்பட உள்ளது.

PT WEB

செய்தியாளர் ; M. மீரா

ஆகஸ்ட் 12ஆம் தேதி நிகழவுள்ள முழுச் சூரிய கிரகணத்தை, பூமியில் இருந்து சுமார் 50,000 அடி உயரத்தில் பறக்கும் சிறப்பு ஆராய்ச்சி விமானங்கள் மூலம் ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. சாதாரணமாக பூமியில் இருந்து பார்க்கும்போது முழுச் சூரிய கிரகணத்தின் முழு இருள் சுமார் 2 நிமிடங்கள் 18 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். ஆனால், கிரகண நிழலின் வேகத்துடன் பயணிக்கும் நாசாவின் ஆராய்ச்சி விமானங்களுக்கு இந்த இருளை மேலும் 42 வினாடிகள் நீட்டிக்க முடியும். இதன்மூலம் சுமார் 3 நிமிடங்கள்வரை கிரகணத்தை ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

the sun

இதற்காக ஐஸ்லாந்தின் கெஃப்லாவிக் (Keflavik) விமான நிலையத்திலிருந்து, நாசாவின் WB-57 ரக அதிநவீன ஆராய்ச்சி விமானம் புறப்பட உள்ளது. இரண்டு சிறப்பு ஆராய்ச்சி விமானிகள் இந்த விமானத்தை இயக்கி, ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்து இடையேயான வான்பரப்பில் ஸ்ட்ரேடோஸ்பியர் பகுதியில் பயணிக்க உள்ளனர்.

சுமார் 50,000 அடி உயரத்தில் பறப்பதால், கீழ்மட்ட மேகங்கள் மற்றும் வளிமண்டலத்தில் காணப்படும் தூசி உள்ளிட்ட தடைகள் பெருமளவில் தவிர்க்கப்படும். இதனால் சூரிய கிரகணத்தின் போது நடைபெறும் முக்கிய மாற்றங்களை மிகவும் தெளிவாகப் பதிவு செய்ய முடியும். குறிப்பாக, சந்திரனின் அடர்ந்த நிழல் விமானத்தின் மீது கடந்துசெல்லும் தருணம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அந்த நேரத்தில் விமானத்தின் காக்பிட் பகுதி திடீரென இருண்டு, வெப்பநிலையிலும் மாற்றம் ஏற்படலாம். இந்த தனித்துவமான சூழலைப் பயன்படுத்தி சூரியனைப் பற்றிய புதிய தகவல்களைச் சேகரிக்க நாசா திட்டமிட்டுள்ளது.

Nasa

விமானத்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள நான்கு அதிநவீன அகச்சிவப்பு கேமராக்கள், சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கொரோனாவை மிகத் துல்லியமாகப் படம் பிடிக்க உள்ளன. இந்த கேமராக்கள் ஒரு வினாடிக்கு சுமார் 20 படங்கள் வரை பதிவுசெய்யும் திறன் கொண்டவை.

சூரியனின் மேற்பரப்பைவிட அதன் கொரோனா ஏன் மில்லியன் கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ளது என்பது விஞ்ஞானிகளுக்கு நீண்டகாலமாகப் புரியாத புதிராக உள்ளது. மேலும், சூரியனில் ஏற்படும் மிகச்சிறிய, ஆனால் சக்திவாய்ந்த காந்த வெடிப்புகளான ‘நானோ ஃபிளேர்ஸ்’ குறித்தும் இந்த ஆய்வு முக்கிய தகவல்களை வழங்கக்கூடும். பூமியில் இருந்து கிரகணத்தைப் பார்ப்பது ஒரு கண்கவர் அனுபவமாக இருந்தாலும், அதன் நிழலுக்குள் பறந்துசென்று ஆய்வுசெய்வது விஞ்ஞானிகளுக்கு முற்றிலும் வித்தியாசமான வாய்ப்பாகும்.

Solar eclipse

நாடுகளுக்கு இடையேயான நேர மண்டல மாற்றங்கள் காரணமாக, இந்தியாவில் இந்த கிரகணம் ஆகஸ்ட் 12 இரவு தொடங்கி, ஆகஸ்ட் 13 நள்ளிரவைக் தாண்டி அதிகாலை வரை நீடிக்கிறது. இந்தச் சூரியக் கிரகணம் இந்தியாவில் நேரடியாகப் பார்க்க முடியாது. ஏனெனில், இந்தியாவில் நள்ளிரவு நேரமாக இருப்பதால் கிரகணம் தெரியும் பாதையில் இந்தியா அமையவில்லை. ஐரோப்பாவின் சில பகுதிகள், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அரிய முழுச் சூரிய கிரகணம் தென்பட உள்ளதால், வானியல் ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் இதனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் இந்த இருள், சூரியனின் பல மர்மங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு விஞ்ஞான உலகில் அதிகரித்துள்ளது.