உலகம்

அதிகாரப்பூர்வமற்ற மோடியின் ரஷ்ய அதிபர் சந்திப்பு ஏன்? எதற்கு?

அதிகாரப்பூர்வமற்ற மோடியின் ரஷ்ய அதிபர் சந்திப்பு ஏன்? எதற்கு?

webteam

ஒருநாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்து இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை இன்று சந்தித்தார். இச்சந்திப்பானது ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இல்லாமல் சோச்சி நகரில் நடந்தது. சீன அதிபரை தொடர்ந்து ரஷ்ய அதிபருடன் சந்திப்புக்கு பல காரணங்கள் உண்டு என சிலர் கூறுகின்றனர். பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின் இடையே நடக்கும் முதல் அதிகா‌ரப்பூர்வமற்ற இந்தப் பேச்சுவார்த்தை 4 மணி நேரங்களுக்கு மேல் நீடித்தது. பிரதமர் மோடி ஏற்கனவே சீன அதிபருடன் இவ்வாறு அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பை நிகழ்த்தியுள்ளார். சோச்சி நகருக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.


கச்சா எண்ணெய் பாதிப்புகள் குறித்து பேச்சு?

நிகழ்ச்சி நிரல்களில் இல்லாத இந்தச் சந்திப்பில் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி இருக்கிறார். குறிப்பாக ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய காரணத்தால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து பேசியுள்ளார். ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் போக்கால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில்  உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 80 டாலர்களை கடந்து உயர்ந்து வருகிறது. இது 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மும்மடங்கு அதிகமாகும். மெல்ல மெல்ல உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை கடந்த மே 8க்கு பிறகு விறுவிறுவென உயரத் தொடங்கியுள்ளது. ஈரானுடனான அணு ஆயுத ஒப்‌பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததே இதற்கு காரணமாகும். 

ஈரான் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் உலக சந்தைக்கு வராது என்ற அச்சமே அதன் விலையை உயர வைத்துள்ளது. மறுபுறம் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தென் அமெரிக்க நாடான வெனிசுலா அரசியல் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இதனால் அங்கிருந்து வரும் கச்சா எண்ணெய் அளவும் குறைந்துள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட எண்ணெய் வள நாடுகளும் கச்சா எண்ணெய் அளவை குறைந்துள்ளது. 

இதனையெடுத்து ஷாங்காய் கூட்டமைப்பில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் பெற ரஷ்யா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த பேச்சுவார்த்தை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என்றும் மேலும் சர்வதேச பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் பேசி இருக்கின்றனர், குறிப்பாக ஆஃப்கானிஸ்தான், சிரியா நிலவரங்கள் குறித்தும் எதிர்வரும் முக்கியமான சர்வதேச கூட்டங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசி உள்ளனர் என பேச்சுக்கள் அடிப்படுகின்றன.