உலகம்

'அணு ஆயுதங்களை ஏவ ட்ரம்ப் முயற்சிக்கலாம்!' - அமெரிக்க முப்படைகளுக்கு எச்சரிக்கை

JustinDurai

'அணு ஆயுதங்களை ஏவ அதிபர் ட்ரம்ப் முயற்சிக்கலாம்' என சபாநாயகர் நான்சி பெலோசி, அமெரிக்காவின் முப்படை தளபதிகளுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளார்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின்போது, ஜோ பைடன் வெற்றியை எதிர்க்கும் வகையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நாடாளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் திடீரென கட்டுப்பாடுகளை மீறி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் இதில் போலீஸ் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்தக் கலவரத்திற்கு அதிபர் ட்ரம்ப் தூண்டுதலே காரணம் என்று கூறப்படுகிறது.

புதிய அதிபராக ஜோ பைடன் வருகிற 20-ந் தேதி பதவி ஏற்க உள்ளார். எனவே, ட்ரம்பின் பதவிக் காலம் இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளது. ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் ட்ரம்ப் இந்த நாட்களில் சிக்கலான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், ட்ரம்ப் தனது பதவிக் காலம் முடிவதற்குள் ஆணு ஆயுதங்களை ஏவும் சங்கேத குறியீடுகளை பயன்படுத்தக் கூடும் அல்லது ராணுவ ஸ்டிரைக்கிற்கு உத்தரவிடக் கூடும் என்பதால் பென்டகன் அதிகாரிகள் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நாடளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி உஷார்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக முப்படை ராணுவ தளபதி மார்க் மில்லியை தொடர்பு கொண்டு பேசிய நான்சி பெலோசி, அணு ஆயுத தாக்குதல் நடத்தும் முடிவை ட்ரம்ப் மேற்கொள்வதற்கு முன்பு அதனை அவர் பயன்படுத்தாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நான்சி பெலோசி கூறியுள்ளார்.