இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கொல்ல ரா திட்டமிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அதிபர் சிறிசேனாவைக் கொலை செய்ய இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' (RAW) திட்டமிட்டது என்று கடந்த வாரம் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் உளவு அமைப்பான ராவை இலங்கை அதிகாரிகள் குற்றம்சாட்டுவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கடந்த 2015-ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததையடுத்து ஆட்சி மாற்றத்திற்கு ‘ரா’தான் காரணம் என தெரிவித்திருந்தது.
இந்த செய்தி தொடர்பாகப் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா விளக்கம் அளித்தார். அப்போது, தன்னைக் கொல்வதற்கு இந்தியாவின் உளவு அமைப்பு 'ரா' சதித்திட்டம் தீட்டியிருந்தது என்ற செய்தி தவறானது, அடிப்படை ஆதாரமற்றது என்று பிரதமர் மோடியிடம் அதிபர் சிறிசேனா தெரிவித்ததாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கொல்ல ரா திட்டமிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ரா உளவாளிகளுக்கும், இலங்கை அமைச்சரவைக்கும் தொடர்பு இருப்பது போன்று அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளதாக நமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இது, கொலை முயற்சி தொடர்பாக மைத்திரிபால சிறிசேன கூறியதாக எழுந்த குற்றச்சாட்டை உறுதி செய்யும் விதமாக உள்ளதால், ரா உளவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்த அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், முன்னாள் அதிபர் ராஜபட்ச மகன் இப்படியொரு கோரிக்கையை முன் வைத்துள்ளார்.