உலகம்

சிட்னி கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட தன்னார்வலர்கள்.. என்ன காரணம் தெரியுமா?

JananiGovindhan

தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில், உலகிலேயே ஆஸ்திரேலியாவில்தான் தோல் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் தெரிவித்திருக்கிறது.

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டும், அதனால் ஆயிரக்கணக்கானோர் இறக்கவும் செய்கிறார்கள் என தரவுகள் மூலம் அறிய முடிகிறது.

இந்த நிலையில், தோல் மற்றும் உடல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல நிர்வாண புகைப்பட கலைஞரான ஸ்பென்சர் டுனிக் என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் ஃபோட்டோ ஷூட் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.

அதில், இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேலானோர் நிர்வாணமாக திரண்டிருக்கிறார்கள். இதற்காக நேற்று (நவ.,26) போண்டி கடற்கரையில் அதிகாலை சூரிய உதயத்தின் போதே மக்கள் திரண்டு நின்றும், நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வுக்காக போண்டி கடற்கரையின் ஒரு பகுதி நிர்வாண கடற்கரையாகவே தற்காலிகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசியுள்ள ஸ்பென்சர் டுனிக், “தோல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இங்கு வந்து இந்த கலைத் திட்டத்தை மேற்கொண்டது பெருமையாக இருக்கிறது.” எனக் கூறியிருக்கிறார்.

விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்றிருந்த தன்னார்வலர்களில் ஒருவரான ஃபிஷர் எனும் 77 வயது முதியவர், “என் முதுகில் இரண்டு வீரியமிக்க தோல் புற்றுநோய் கட்டிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் என் வாழ்க்கையின் பாதி நாட்களை சூரிய ஒளியிலேயே கழித்திருக்கிறேன்.” என AFB செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.