அமெரிக்காவில் படித்து வந்த மைசூர் மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகில் உள்ள குவேம்புநகரைச் சேர்ந்தவர் சுதேஷ் பட். இவர் மைசூரில் உபநிஷத் யோகா மையம் நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் அபிஷேக் (25). மைசூரில் பி.இ கம்யூட்டர் சயின்ஸ் முடித்த அபிஷேக், மேல் படிப்புக்காக கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன் அமெரிக்கா சென்றார். அங்கு கலிபோர்னியாவின் சான் பெர்னார்டி னோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார். பகுதி நேரமாக சாலையோர உணவு விடுதி (Motel) ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று முன் தினம் மோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார்.
இதுபற்றி மைசூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து அபிஷேக்கின் சகோதரர் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
‘அமெரிக்க மற்றும் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, என்ன நடந்தது, எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரித்து வருகிறோம். இன்னும் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை’ என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் மைசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.