மியான்மரில் நடக்கும் வன்முறைகளை ஆங் சான் சூச்சி கண்டு கொள்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுத்துள்ளது.
உலக மக்களால் ஜனநாயகப் போராளியாக அறியப்படுபவர் மியான்மரின் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி. 1990-களில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் அமைதியின் அடையாளமாகவே கருதப்படுகிறார். அதற்காகவே அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அவர் ஆட்சிக்கு வந்தால், மியான்மரின் அனைத்து அடக்குமுறைகளும் முடிவுக்கு வரும் என்று அனைத்துத் தரப்பினரும் நம்பினார்கள். ஆனால், ரோஹிங்யா எனப்படும் இஸ்லாமிய சமூகத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை அவர் கண்டுகொள்ளவில்லை என்று தற்போது குற்றம்சாட்டப்படுகிறது. ஊடகங்களையும் அவர் புறக்கணிப்பதாகக் கூறப்படுகிறது.
சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, உயிரைப் பணயம் வைத்து அவரைப் பல செய்தியாளர்கள் சந்தித்துப் பேட்டி கண்டனர். ஆனால், அதிகாரம் கைக்குவந்த பிறகு, உள்நாட்டு ஊடகங்கள் எதற்கும் அவர் பேட்டியளிக்கவில்லை. செய்தியாளர் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யவில்லை. தேவைப்பட்டால் சில சர்வதேச ஊடகங்களுக்கு மட்டும் பேட்டி தருகிறார் என உள்நாட்டுச் செய்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவையெல்லாம் ராணுவத்தின் அடக்குமுறை ஆட்சியை நினைவூட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.