உலகம்

மியான்மரில் தலையில் பூச்சூடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் - காரணம் இதுதான்!

EllusamyKarthik

மியான்மர் நாட்டில் மக்கள் தலையில் பூச்சூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த பிப்ரவரி முதலே ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு தினந்தோறும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆங் சாங் சூச்சியின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் தலையில் பூச்சூடி, அதனுடன் வீதியில் இறங்கி பேரணி நடத்தியுள்ளனர். மியான்மர் நாட்டின் காந்தி என சொல்லப்படும் ஆங் சாங் சூச்சி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று பிறந்த நாள். 

காரணம் என்ன?

மியான்மரில் தற்போது ராணுவம் நாட்டை ஆட்சி செய்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆங் சாங் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் தனது ஆட்சியை  அமல்படுத்தியது. தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ராணுவம் குற்றம்சாட்டியது. அப்போது முதலே மியான்மரில் போராட்டம் வெடித்தது. மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர் அதனை ராணுவம் ஒடுக்க அராஜக போக்கை கையில் எடுத்தது. 

“ஆங் சாங் சூச்சி உட்பட மியான்மர் மக்கள் அனைவருக்கு வேண்டியது விடுதலை மட்டும்தான். தனி நபர் மற்றும் சமூக சுதந்திரம் எங்கள் நாட்டில் பரிக்கப்பட்டுள்ளது” என இந்த பூச்சூடும் போராட்டத்தில் கலந்து கொண்ட போராளிகள் கூறுகின்றனர். ஆங் சாங் சூச்சி பெரும்பாலும் தலையில் பூச்சூடிக் கொள்வது வழக்கம். அதனை நினைவு படுத்தும் வகையிலே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பூக்களை சூடிக் கொண்டனர்.