உலகம்

மியான்மர் இனப்படுகொலை: அரசியல் தீர்வு காண சர்வதேச நாடுகளிடம் வங்கதேசம் கோரிக்கை

மியான்மர் இனப்படுகொலை: அரசியல் தீர்வு காண சர்வதேச நாடுகளிடம் வங்கதேசம் கோரிக்கை

webteam

மியான்மரில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு வருவதாக வங்கதேசம் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. 

ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு எதிராக மியான்மர் ராணுவம் மேற்கொண்டுள்ள அடக்குமுறை குறித்து மேற்கத்திய மற்றும் அரபு நாடுகளின் தூதர்களிடம் வங்கதேச வெளியுறவு அமைச்சர் முகமது அலி எடுத்துரைத்தார். மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு குடிபெயர்ந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 7 லட்சமாக உயர்ந்துள்ளதாக கூறிய அவர், இது உள்நாட்டு பிரச்னையாக மாறியுள்ளதாக தெரிவித்தார். தற்போதைய வன்முறையால் 3 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர், இந்த பிரச்னையை அரசியல் ரீதியாக தீர்க்க சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மியான்மரில் நடைபெற்றுவரும் வன்முறையால் அங்கிருந்து வங்கதேசத்திற்கு இடம்பெயரும் ரோஹிங்யா இஸ்லாமியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், அவர்களுக்கு உணவு, மருந்து, உறைவிடம் உள்ளிட்ட நிவாரணப் பணிகளை அளிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான அகதிகள், போதிய உணவும், உறைவிடமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர ஐநா வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, அங்கு உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியதாகக் கூறி ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை அளிக்க மியான்மர் அரசு மறுத்து வருகிறது. இதனால், ரோஹிங்யா கிளர்ச்சியாளர்களுக்கும், மியான்மர் ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த மோதலால் பொதுமக்கள் 3 லட்சம் பேர் வங்கேதேச நாட்டிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

இதனிடையே, ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் போராட்டம் நடைபெற்றது. லண்டனில் மியான்மர் தூதரக அலுவலகம் முன் திரண்ட நூற்றக்கணக்கான மக்கள், மியான்மர் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீதான ராணுவ அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள், மியான்மர் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசில், இதுபோன்று அடக்குமுறை நிகழ்த்தப்படுவதால் சர்வதேச அளவில் அவர் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.