மீன்பிடி போட்டியில் ஈடுபட்டதாகச் சொல்லி இலங்கையின் திரிகோணமலை பகுதியில் தமிழர்கள் மற்றும் சிங்களத்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதலின் போது ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திரிகோணமலையின் திருக்கடலூர் பகுதியில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதியில் சித்திரை திருநாளை முன்னிட்டு நேற்று (ஏப்.,06) விளையாட்டு போட்டி நடைபெற்றிருக்கிறது. இந்த போட்டியை மேலும் கொண்டாட்டமாக்கும் விதமாக மீன்பிடி போட்டியும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஆனால் மீன்பிடி போட்டி நடந்த இடம் சிங்கள மக்கள் வசிக்கும் விஜிதபுர பிரதேச பகுதியாம். இந்தப் பகுதியை ஒட்டிய கரைக்கு அருகே மீன் பிடிப்பதில்லை என தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே ஒரு இணக்க ஒப்பந்தம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் மீன்பிடிப்பில் ஈடுபட்டதால் இந்த மோதல் சம்பவம் மூண்டிருக்கிறது.
இந்த மோதல் விவகாரம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பவம் நடந்த இடம் பெரும்பான்மையாக சிங்கள மக்களே வசித்து வருவதால் சிறுபான்மை சமூகத்தவர்களாக பாவிக்கப்படும் தமிழர்கள் மீன் பிடியில் ஈடுபட்டதால் இரு தரப்பு மக்களிடையே நிலவிய வாய்த்தகராறு, கைகலப்பாக முற்றியிருக்கிறது.
மேலும், குறிப்பிட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்க ஏற்கெனவே கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் அது மீறப்பட்டதாலேயே இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதாகவும் போலீசார் கூறியிருக்கிறார்கள். இந்த மோதலில் ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து விஜிதபுர பிரதேசம் மற்றும் திருக்கடலூர் ஒட்டிய பகுதிகளில் மேலும் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பலத்த ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. நிலைமை கட்டுக்குள் வந்தாலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே சலசலப்பு நிலவிவருகிறது.