corona virus reuters
உலகம்

உருமாறிப் பரவும் கொரோனா.. அச்சத்தில் உலக நாடுகள்.. WHO சொல்வது என்ன?

உலகையே முடக்கிவைத்த கொரோனா வைரஸ், தொடர்ந்து உருமாறி புதிய வகைகளாகப் பரவி வருவது மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் புதிய வைரஸ் எவ்வளவு ஆபத்தானது? இந்தியாவிலும் பரவ வாய்ப்புள்ளதா? உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது? விரிவாகப் பார்க்கலாம்...

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்- ர

உலகையே அச்சுறுத்தி, பல நாடுகளை முடக்கி, லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசுகளின் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் எனப் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகே உலக நாடுகள் அந்தப் பெருந்தொற்றிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தன. இருப்பினும், கொரோனா வைரஸ் முற்றிலும் மறைந்துவிடவில்லை. தொடர்ந்து மரபணு மாற்றங்களுக்கு உள்ளாகி புதிய வகைகளாகப் பரவி வருகிறது. அந்த வகையில், தற்போது PJ.2.1 என்ற புதிய வகை வைரஸ் ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

corona virus

கடந்த மே மாதம் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் PJ.2.1 வைரஸின் மாதிரி முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில், PJ.2.1 வைரஸ் 'Saltation Variant' எனப்படும் அதிகப்படியான திடீர் மரபணு மாற்றங்களைக் கொண்ட வகையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ், JN.1 குடும்பத்தைச் சேர்ந்த MC.10.1.7 என்ற முந்தைய வைரஸ் வகையிலிருந்து உருவாகியுள்ளது. இந்தப் புதிய வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு தனித்துவமான அறிகுறிகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. பொதுவாக, கொரோனா பாதிப்பின்போது ஏற்படும் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கடைப்பு, தலைவலி, உடல் வலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். சிலருக்கு சுவை மற்றும் வாசனை உணரும் திறன் குறைதல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் இந்தப் புதிய வைரஸுக்கு எதிராகச் செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பாற்றல் PJ.2.1 வைரஸுக்கு எதிராக எந்த அளவுக்குச் செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில், LP.8.1 வகை கொரோனா தடுப்பூசியைப் பெற்றவர்களின் உடலில் உருவான ஆன்டிபாடிகள் இந்தப் புதிய வைரஸுக்கு எதிராகவும் செயல்படுவது தெரியவந்துள்ளது. இருப்பினும், இதன் செயல்திறன் குறித்து மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

corona virus

இதற்கிடையே, PJ.2.1 வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனமான WHO வெளியிட்டுள்ள தகவலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதன்படி, WHO-வின் அதிகாரப்பூர்வ கண்காணிப்புப் பட்டியலில் PJ.2.1 இதுவரை சேர்க்கப்படவில்லை. இருப்பினும், எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் இந்த வைரஸுக்கு எதிராக எந்த அளவுக்குச் செயல்படும் என்பதை மதிப்பிடுவதற்கான ஆய்வுகளில் PJ.2.1 வைரஸையும் சேர்க்க வேண்டும் என WHO தெரிவித்துள்ளது.கனடாவில் இந்தப் புதிய வைரஸின் பரவல் அதிகரித்து வருவது உலக கவனத்தை ஈர்த்துவருகிறது.