உலகம்

ஜெருசலேம் பாலஸ்தீன தலைநகரம்: 57 நாடுகள் அங்கீகாரம்

webteam

பாலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலேம் பகுதியை ‌அங்கீகரிப்பதாக 57 இஸ்லாமிய நாடுகள் அறிவித்துள்ளன. 

பல்வேறு சர்ச்சைகளுக்குரிய ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 6ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பெரும்பாலான உலக நாடுகள் ஆதரவு அளிக்கவில்லை. அத்துடன் டிரம்பின் அறிவிப்புக்கு மத்திய கிழக்கு நாடுகளில் பலத்த எதிர்ப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்க பெருவாரியான ஆதரவு நாடுகளை இழந்துள்ளது. இருப்பினும் தங்கள் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ஜெருசலேத்தை பாலஸ்தீனத்தின் தலைநகரமாக அங்கீரித்து 57 இஸ்லாமிய நாடுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மேலும் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க‌ அதிபர் ட்ரம்பின் முடிவு செல்லாது என்றும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடந்த இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதால், மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கு அமெரிக்கா துரோகம் செய்வதை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.