உலகம்

போப் ஆண்டவரை முத்தமிடும் பேய் டொனால்டு டிரம்ப்: ஷாக்கிங் ஓவியம்

போப் ஆண்டவரை முத்தமிடும் பேய் டொனால்டு டிரம்ப்: ஷாக்கிங் ஓவியம்

webteam

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையில் கொம்புடன் போப் ஆண்டவரை முத்தமிடுவது போன்ற சுவர் ஓவியம் வாட்டிகன் நகரில் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் போப் பிராசிஸின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது போலவும், டிரம்ப்பின் தலையில் கொம்புகள் இருப்பது போலவும் இருப்பதால், மக்கள் இந்த ஓவியத்தை அதிக அளவில் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

போப் பிரான்சிஸை டிரம்ப் உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுப்பதைப் போன்று வரையப்பட்டு, நன்மை தீமையை மன்னிக்கும் என்று எழுதப்பட்டுள்ளது. வருகின்ற மே 24 ஆம் தேதி இத்தாலிக்கு வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வருகையை ஒட்டி இப்படி ஒரு ஓவியம் வரையப்பட்டுள்ளது. தனது இத்தாலி பயணத்தின் ஒரு பகுதியாக டிரம்ப், கத்தோலிக்கர்களின் தலைமை இடமான வாட்டிகனுக்கு வந்து போப் பிரான்சிஸை சந்திக்கிறார்.

ரோம் நகரில் உள்ள வாட்டிகன் நுழைவாயிலில் உள்ள இந்த ஓவியத்தை டிவிபாய் என்ற ஸ்பானிஷ் கலைஞர் வரைந்துள்ளார். அருகில் நன்மை தீமையை மன்னிக்கும் என்ற வாசகம் ஆங்கிலத்திலும், இத்தாலி மொழியிலும் எழுதப்பட்டு கையொப்பமிடப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அவர் வரைந்துள்ளார் என்று தெரிய வருகிறது.

எது எப்படி இருந்தாலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மே 24 ஆம் தேதி வாட்டிகனில் உள்ள அப்போஸ்டாலிக் மாளிகையில் போப் பிரான்சிஸை சந்திக்கிறார்.