காண்ட்லாவிலிருந்து மும்பைக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் சக்கரங்களில் ஒன்று கழன்று விழுந்ததால், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் விமானநிலையத்தில் அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டது.
காண்ட்லாவிலிருந்து 75 பேருடன் மும்பைக்கு பாம்பார்டியர் Q400 விமானம் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்திலிருந்து ஒரு பொருள் விழுவதை காண்ட்லா விமானப்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவு கவனித்தது. பின்னர் இது குறித்து விமானிக்குத் தெரிவித்துவிட்டு விழுந்த பொருளை எடுத்து வர ATC ஜீப் ஒன்றையும் அனுப்பினர்.
பணியாட்கள் விமானத்திலிருந்து விழுந்த பொருளை எடுத்து வந்ததை சோதனையிட்ட விமானநிலைய அதிகாரிகள், அது உலோக வளையங்களுடன் கூடிய வெளிப்புற சக்கரம் என்பதை உறுதிப்படுத்தினர்.
அதன் பிறகு விமானநிலையங்களில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் வரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுக்குழுவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர்.
இருப்பினும் விமானி மாலை 4 மணிக்கு மும்பையில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டதுடன், பயணிகள் சிறு காயமின்றி உயிர்தப்பினர்.
இந்த சம்பவத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.