Dubai Attack  ANI
உலகம்

ஏமனில் இருந்து ஏவுகணைகள்..? 20 நிமிடங்களில் 7 தாக்குதல்கள்.. துபாயைச் சூழ்ந்த கரும்புகை!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஜெபெல் அலி தொழிற்பகுதியில் அடுத்தடுத்து பலத்த சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், இரவு வானத்தைக் கரும்புகை சூழ்ந்திருப்பது பதிவாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

ஈரானின் Mehr செய்தி நிறுவனம், அமீரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிட்ட தகவலின்படி, வெறும் 20 நிமிடங்களுக்குள் குறைந்தது 7 வெடிப்புகள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ததாகக் கூறி இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dubai Flag

இந்த வெடிப்புகள் ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டதா அல்லது தொழிற்சாலை விபத்தா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. இதற்கிடையில், அமெரிக்கா–ஈரான் மோதல் நீடித்துவரும் நிலையில், ஏமனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக சில ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், வெடிசத்தத்துக்கான காரணம் குறித்து அமீரக அரசு அல்லது அந்நாட்டு ஊடகங்கள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், நாசாவின் thermal படங்களின்படி, ஜெபெல் அலி துறைமுகத்திற்கு அருகிலுள்ள எரிபொருள் சேமிப்பு மற்றும் பரிமாற்றக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது சேதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அருகிலுள்ள அல் ஃபுர்ஜான் பகுதி மக்கள், வெடிச் சத்தம் கேட்ட நேரத்தில் பலத்த அதிர்வு இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

Dubai Flag

துபாய் நகர மையத்திலிருந்து சுமார் 25 மைல் தென்மேற்கே அமைந்துள்ள ஜெபெல் அலி பகுதியில், உலகின் மிகப்பெரிய செயற்கைத் துறைமுகங்களில் ஒன்று உள்ளது. மேலும், முக்கிய சுதந்திர வர்த்தக மண்டலத்தையும் கொண்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கியத் தொழில் மற்றும் வர்த்தக மையமாக இருக்கிறது. அமெரிக்கா–ஈரான் பதற்றம் நீடித்துவரும் நிலையில், அமெரிக்காவின் பிராந்திய கூட்டாளியான ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து High alert நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.