அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தினார். இதன்படி இந்தியப் பொருள்களுக்கும் 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தவிர சீனா, கம்போடியா, வியட்நாம், மியான்மர், இலங்கை, வங்கதேசம், செர்பியா, தாய்லாந்து, சீனா, தைவான், பாகிஸ்தான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு 10% வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் இந்த வரி விதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயமும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொருளதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதில் சீனாவுக்கு 104% வரி விதிக்கப்பட்டுள்ளது. எனினும் சீனா, ஐரோப்பா, கனடா ஆகியவை அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வரியை விதித்து தனது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்கா உடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்ளப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசமும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
வங்கதேசத்திற்கு 37% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய அந்நியச் செலாவணி வருவாய் ஈட்டும் டெக்ஸ்டைல் துறைக்கு மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. இந்த வரி விதிப்பால், நாட்டில் டெக்ஸ்டைல் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த வரிச்சுமையைக் குறைக்கும் முயற்சியாக, அமெரிக்க விவசாயப் பொருட்களை வரி இல்லாமல் வாங்குவதன் மூலம் அந்நாட்டைச் சமாதானப்படுத்த வங்கதேச இடைக்கால அரசாங்கம் முயல்கிறது. இதன்மூலம், அமெரிக்கா தனது பரஸ்பர வரி விதிப்பு முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என்று அந்நாடு நம்புகிறது. அந்த வகையில், அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரிகளைத் தவிர்க்கும் முயற்சியாக, பருத்தி உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க விவசாயப் பொருட்களை வரி இல்லாமல் வாங்கும் முடிவை அந்நாட்டு அரசிடம் வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில், ’வங்கதேச ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கவுள்ள பரஸ்பர வரி நடவடிக்கையை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என அவர் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ’வங்கதேசத்தில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகப்படுத்துவது, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு போன்ற அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்யவும் தங்கள் நாடு தயாராக உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.