கலிபோர்னியா - கொலை செய்யப்பட்ட குழந்தை
கலிபோர்னியா - கொலை செய்யப்பட்ட குழந்தை புதிய தலைமுறை
உலகம்

‘எங்கள் வீட்டின் வெளிச்சம் அவள்’ - 4 வயது குழந்தையை கொன்றதாக தாய் கைது; துயரத்தில் குடும்பத்தினர்..!

ஜெனிட்டா ரோஸ்லின்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4 வயது குழந்தையை தாயே கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த தாய், இறந்த தனது மகளின் சடலத்தினை வெகுநாட்கள் தனது காரில் வைத்து சுற்றி வந்துள்ளார் என விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர்.

KTLA , KABC மற்றும் லாஸ் ஏஞ்சல் டைம்ஸ் செய்தி நிறுவனங்களின் கூற்றுப்படி, குழந்தையை கொன்றதாக கைது செய்யப்பட்ட அப்பெண் கலிபோர்னியாவை சேர்ந்த மரியா அவலோஸ் (38). இவரின் மகள், கொலைசெய்யப்பட்ட மியா கோன்சாலஸ் (4). கடந்த வியாக்கிழமை இரவு, கிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் கார் ஒன்றில் குழந்தை மியாவின் சடலத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார் மரியா. அப்போது அக்குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்துள்ளார். சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்துள்ளது. கொடூரமான குற்றம் என்ற அடிப்படையில், மரியா உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து குழந்தை மியாவின் தந்தை தெரிவிக்கையில், “கடந்த சில வாரங்களாகவே மரியா பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார். இதில் ஏற்பட்ட மனக்கசப்பில், கடந்த சில வாரங்களுக்கு முன்பே மியாவை தன்னோடு அழைத்து சென்றுவிட்டார் அவர்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் தான் குழந்தையோடு தொடர்பில் இல்லை என அவர் தெளிவுபடுத்தியிருப்பதாக தெரிகிறது.

குழந்தை மியா குறித்து குடும்பத்தினர் தெரிவிக்கையில், ”மியா மிகவும் நல்ல குழந்தை. எங்கள் வீட்டின் வெளிச்சம் அவள். அவளுக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது; இப்படியான இறப்பு அவளுக்கு நேர்ந்திருக்கவே கூடாது.

கொலை

உண்மையில் நாங்கள் மரியாவை கடந்த சில தினங்களாகவே தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். அவள்தான் மன அழுத்தத்தில் இருப்பதாக சொல்லி பேச மறுத்துவிட்டாள். இப்போது சிறையிலிருந்து எங்களுக்கு அழைக்கிறாள். இனி என்ன வேண்டும் அவளுக்கு?” என்று வேதனையோடு பேசியுள்ளனர்.

மேலும் குழந்தையின் இறப்பிற்கான காரணத்தினை சோதித்த மருத்துவர் தெரிவிக்கையில், “குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டு, மணிக்கட்டில் தாக்கப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அதில்தான் அவர் உயிரிழந்துள்ளார்” என்று தெரிவித்தார்.

குழந்தையை கொன்றதாக சந்தேகத்தின் பெயரில் தாய் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.