நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இளம் எம்பியாக இருப்பவர், ஹனா ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் ஹக்கா. இவர் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். 22 வயதான இளம் எம்பி, தனது கன்னி உரையின்போதே மாவோரி மொழியில் பேசியது நியூசிலாந்து மட்டுமல்லாது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், நியூசிலாந்து அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்டு வருவதற்காக நியூசிலாந்து ஆளும் கூட்டணியில் ACT கட்சி முன்மொழிவை கொண்டு வந்து வாக்கெடுப்பிற்கு அழைப்புவிடுத்தது.
அதாவது, ஆங்கிலேயர்களுக்கும், நியூசிலாந்தின் பூர்வகுடிகள் என அறியப்படும் மாவோரி பழங்குடியினருக்கும் இடையே 1840-ஆம் ஆண்டு வைதாங்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் மாவோரி பழங்குடியின மக்களுக்கு சில சிறப்புச் சலுகை மற்றும் உரிமைகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்தச் சலுகைகளை பறிக்கும் வகையில் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் புதிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு டிபாடி மாவோரி கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடிகளான மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பி, மாவோரி இன மக்களின் நடனம் ஆடி சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலையும் நாடாளுமன்றத்தில் கிழித்து எறிந்தார். இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனையடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில், இது உலக அளவில் கவனம் பெற்றது.
இதைத் தொடர்ந்து வைதாங்கி சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவோரி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் நடைபெற்ற 9 நாள் பேரணி வெலிங்டனில் நேற்று முடிவடைந்தது. போராட்டத்தின் இறுதிக்கட்டமாக பல்வேறு நகரங்களில் வந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தலைநகரில் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்கள், தங்களுடைய (மாவோரி) பாரம்பரிய உடை அணிந்து, மாவோரி கொடிகளை ஏந்தி வந்தனர். பேரணியின் முடிவில், நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சட்ட மசேதா மாவோரி உரிமைகளை பறிப்பதாக குற்றம்சாட்டி முழக்கம் எழுப்பினர். இப்போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. நியூசிலாந்து வரலாற்றில் நடந்த மிகப் பெரிய போராட்டங்களில் இதுவும் ஒன்று எனக் கருதப்படுகிறது.
184 ஆண்டுகள் பழைமையான வைதாங்கி ஒப்பந்தத்தை மாற்றம் செய்ய தற்போதைய மசோதா முயல்கிறது. இது மாவோரி பழங்குடியினர் தங்கள் நிலங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், ஆங்கிலேயர்களுக்கு ஆட்சியை வழங்குவதற்குப் பதிலாக அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் பரந்த உரிமைகளை வழங்கும் உரிமையாகும். நியூசிலாந்தின் 5.3 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 20 சதவிகிதம் மாவோரி இன மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.